தி.மு.க'விற்கு ஆண்டவன்தான் நல்ல புத்திய கொடுத்து பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி'க்குள் கொண்டு வரணும் - அண்ணாமலை !
"தி.மு.க'வுக்கு ஆண்டவன் நல்ல புத்தியை கொடுத்து பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி'க்குள் கொண்டு வர முன்வரவேண்டும்" என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அன்னியூர் பகுதியில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசினார். அப்பொழுது ஒருவர் யாரோ சொல்லி குடுத்தது போல் குறுக்கே புகுந்து, "பெட்ரோல் விலையை எப்போது குறைப்பீர்கள்'' என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அண்ணாமலை, "பா.ஜ.க கட்சி பெட்ரோல் விலையை 35 ரூபாய் குறைக்கும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி'க்குள் கொண்டு வந்து விலையை குறைப்போம். தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ஜி.எஸ்.டி கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் வளைகாப்புக்கு சென்றுவிட்டார். இது தான் தி.மு.க'வின் அவலமான நிலை. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பா.ஜ.க அரசு தயாராக உள்ளது" என்றார்.
மேலும் தொடந்த அவர், "பெட்ரோல், டீசலை ஏன் ஜி.எஸ்.டி'க்குள் கொண்டுவரக்கூடாது என நிதியமைச்சர் சொல்கிறார் என புரியவில்லை. இதனை தமிழக அரசு விளக்க வேண்டும். தி.மு.க'வுக்கு ஆண்டவன் நல்ல புத்தியை கொடுத்து பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி'க்குள் கொண்டு வர முன்வரவேண்டும்'' என அவர் தெரிவித்தார்.