ஊர்க்காவல் படையினருக்கான ஊதிய உயர்வுக்கு அண்ணாமலையின் சட்டபோராட்டம் ! - வழக்கில் வெற்றி !
Breaking News.
ஊர்க்காவல் படையினருக்கான ஊதியத்தை உயர்த்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்துள்ளது.
ஊர் காவல் படையினருக்கு நாளொன்றுக்கு 560 ரூபாய் ஊதியத்தில் ஐந்து நாட்களை மட்டுமே பணி நாட்களாக நிர்ணயித்து 2007ஆம்.ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் ஊர்காவல்படையினரின் தொடர் கோரிக்கைகளை ஏற்று, பணி நாட்களை மட்டும் 10 நாட்களாக அதிகரித்து, 2019ம் பிப்ரவரி 19ஆம் தேதி உள்துறை அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், பா.ஜ.க தமிழக தலைவருமான அண்ணாமலை பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் அண்ணாமலை தரப்பில் ஒவ்வொரு மாதமும் 5600 ரூபாய் மட்டுமே அவர்களுக்கு கிடைப்பதாகவும், 17600 ஊர் காவல் படையினரில் 76 சதவீதத்தினர் பட்டியலின பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் என சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது, மேலும் புதுச்சேரி, ஆந்திரா போல ஊர்க்காவல் படையினருக்கு பணி நாட்களையோ அல்லது ஊதியத்தையோ உயர்த்த வேண்டும் என வலியுறுத்தபட்டது.
பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், வேலைவாய்ப்பு இல்லாமல் பலர் ஊர்காவல் படையில் சேர்ந்து வருவாய் ஈட்டும் நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும் என குறிப்பிட்டதுடன்.10 நாட்கள் பணி வழங்கபடுவதாக அரசு கூறினாலும், பல ஊர் காவல் படையினர் மாதம் முழுதும் பணியில் அமர்த்தப்படுவதாக தெரிவித்ததுடன், இதை முறைப்படுத்த வேண்டும் என்வும், யாருக்கும் சாதகமாக செயல்படாமல் தேர்வு மற்றும் பணிக்கு உரிய விதிகளை வகுக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும் ஊர்காவல் படையில் உள்ள ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சமாக நிர்ணயிக்கபட்ட 5600 ரூபாய் ஊதியம் கிடைக்கும் வகையில் பணி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். ஊர்க்காவல் படையினருக்கான ஊதியத்தை அரசு உயர்த்தும் என நம்பிக்கை தெரிவித்து நீதிபதிகள் அண்ணாமலை அவர்கள் தொடர்ந்த வழக்கிற்கு தீர்ப்பளித்தனர். இதன்மூலம் ஊர்க்காவல் படையினரின் ஊதிய உயர்வுக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.