2022 ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் ABP-CVoter கருத்துக் கணிப்பு: வெற்றிக்கனி யாருக்கு?

2022 தொடக்கத்தில் தேர்தலுக்கு செல்லும் ஐந்து மாநிலங்களில் நான்கில் பா.ஜ.க வெற்றி பெறும்.

Update: 2021-09-05 00:36 GMT

வெள்ளிக்கிழமை, (செப்டெம்பர் 3) ABP-CVoter கருத்துக் கணிப்பு, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான 'தேர்தலுக்கு முந்தைய கணக்கெடுப்பை வெளியிட்டது. ABP-CVoter கருத்துக்கணிப்பின் படி, 2022 தொடக்கத்தில் தேர்தலுக்கு செல்லும் ஐந்து மாநிலங்களில் நான்கில் பா.ஜ.க வெற்றி பெறும்.

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வரும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. நான்கு மாநிலங்களிலும் தற்போது NDA அரசாங்கம் உள்ளது.

ABP-CVoter கருத்துக்கணிப்பின்படி, காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில், எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மையை தாண்டாது, இருப்பினும், ஆம் ஆத்மி கட்சி தற்போது பஞ்சாபில் தனிப்பெரும் கட்சியாக முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு, கருத்துக் கணிப்பு அதிர்ச்சியளிக்கிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது.

ஐந்து மாநிலங்களின் ABP-CVoter தேர்தலுக்கு முந்தைய கணக்கெடுப்பின் விவரங்கள் இங்கே:

உத்தர பிரதேசம்:

உத்திரபிரதேசத்தில், பா.ஜ.க கூட்டணி 42 சதவிகித வாக்குகளைப் பெறும் என்று கருத்துக் கணிப்பு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. SP 30 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது, மேலும் BSP வெறும் 16 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும். பிரியங்கா காந்தியின் தலைமையில், காங்கிரஸ் கட்சி வெறும் 5 சதவிகித வாக்கு சதவீதத்துடன் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது.



மொத்த 400 தொகுதிகளில் 259-267 இடங்களுடன் பாஜக வசதியாக பெரும்பான்மையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 109-117 இடங்களைப் பெற்று பிரதான எதிர்க்கட்சியாக உருவாகலாம்.

சுவாரஸ்யமாக, BSP 12-16 இடங்களை மட்டுமே வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளத. காங்கிரஸ் கட்சி 3 முதல் 7 இடங்களையும், மற்றவை 6 முதல் 10 இடங்களையும் பெறும்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் மிகவும் பிரபலமான தலைவராக உள்ளார், பதிலளித்தவர்களில் 40 சதவிகிதத்தினர் அவரை முதல்வர் தேர்வாக விரும்புகிறார்கள். அகிலேஷ் யாதவ் 28 சதவிகிதம் பெற்று இரண்டாவது இடத்திலும், முன்னாள் முதல்வர் மாயாவதி மூன்றாவது இடத்திலும் உள்ளார். 


உத்தரகண்ட்:

ABP-CVoter கருத்துக்கணிப்பின்படி, உத்தரகண்ட் மாநிலத்தில் பா.ஜ.க வெற்றிபெறும். 70 இடங்களில் 43 சதவீத வாக்குகளையும், 44-48 இடங்களையும் பா.ஜ.க வெல்லும். மறுபுறம், காங்கிரஸ் சுமார் 33 சதவிகித வாக்குகளைப் பெற்று 19-23 இடங்ளைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சியின் இழப்பில் ஆதரவு பெற்று வருகிறது. ஆம் ஆத்மி 15 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், வெறும் 0-4 இடங்களை மட்டுமே பெறக்கூடும்

முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ஹரீஷ் ராவத் 31 சதவிகிதம் பெற்று முதலிடத்தில் உள்ளார், அதே நேரத்தில் தற்போதைய முதல்வர் புஷ்கர் சிங் டாமி 22.5 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். பா.ஜ.கவின் அனில் பலூனி 19 சதவிகித புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். AAPயின் கர்னல் கோதியால் அடுத்த முதல்வராக வேண்டும் என்று கணக்கெடுக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 10 சதவீதம் பேர் விரும்புகின்றனர். 


பஞ்சாப்

ABP-CVoter கணக்கெடுப்பின்படி, மிக முக்கியமான எல்லை மாநிலங்களில் ஒன்றான பஞ்சாப், ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முந்தைய கணக்கெடுப்பு, ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாபில் 51-57 இடங்கள் மற்றும் 35 சதவீத வாக்குகள் பங்களிப்புடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கலாம் என்று கூறுகிறது.

தற்போதைய முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இடையே ஏற்பட்ட மோதலால் பெரும் நெருக்கடியை சந்திக்கும் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தோல்வியை எதிர்நோக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் 77 இடங்களைப் பெற்றிருந்த நிலையில் 38-46 இடங்களை மட்டுமே வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 29 சதவீத வாக்குகள் கிடைக்கும்.

பஞ்சாபில் பா.ஜ.க ஒரு பெரிய சக்தி அல்ல. மொத்த வாக்குகளில் 7 சதவிகித வாக்குகளைப் பெற கட்சி ஓரளவு வாக்குப் பங்கைப் பெறும், ஆனால் அது ஒரு சட்டமன்றத் தொகுதியில் கூட வெல்ல முடியாமல் போகலாம்.

வித்தியாசமாக, ABP-CVoter கருத்துக் கணிப்பில் பங்கேற்பாளர்களில் 22 சதவீதம் பேர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தனது முதல்வர் வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை. அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் 19 சதவிகிதத்துடன் இரண்டாவது பிரபலமான தலைவராக உள்ளார், தற்போதைய முதல்வர் அம்ரிந்தர் சிங் 18 சதவிகிதத்துடன் உள்ளார்.

மணிப்பூர்:

ABP-CVoter கருத்துக்கணிப்பின்படி, NDA கூட்டணி மணிப்பூரை 41 சதவிகித வாக்குகள் மற்றும் 32-36 இடங்களுடன் வெல்லும்.

மணிப்பூரில், காங்கிரஸ் கட்சி முக்கிய எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பிடிக்கும். காங்கிரஸ் கட்சி 18-22 இடங்களைப் பெறலாம், அதே நேரத்தில் NPF 2-6 இடங்களை வெல்லலாம்.

தேர்தலுக்கு முந்தைய கணக்கெடுப்பின்படி, வடகிழக்கு இந்தியாவில் பா.ஜ.க தனது வெற்றிகரமான பாதையைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மற்ற பகுதிகளைப் போலவே காங்கிரஸ் இப்பகுதியில் தலைமைப் பற்றாக்குறையையும் நம்பகத்தன்மையின் நெருக்கடியையும் எதிர்கொள்கிறது.

கோவா:

உத்தரகாண்டைப் போலவே, இந்த முறையும் அதிக சட்டமன்ற உறுப்பினர்களுடன் கோவாவில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ABP-CVoter கணக்கெடுப்பின்படி, 39 % வாக்குகள் மற்றும் 22-26 இடங்களைப் பெறலாம்.

ஆச்சரியப்படும் விதமாக, ஆம் ஆத்மி 15 சதவிகித வாக்குப் பங்கையும் 4-8 இடங்களையும் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸ் 15 சதவிகித வாக்குப் பங்கையும் 3-7 இடங்களையும் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க முதல்வர் பிரமோத் சாவந்த் 33 சதவீத புள்ளிகளுடன் முதல்வர் பந்தயத்தில் முன்னிலை வகிக்கிறார். ஆம் ஆத்மி வேட்பாளரை வெறும் 14 சதவீதம் பேர் முதல்வராக விரும்புகிறார்கள்.

இக்கருத்துக்கணிப்பு இன்னும் நாட்டில் மிகவும் விருப்பமான அரசியல் கட்சியாக பா.ஜ.க இருப்பதைக் குறிக்கிறது.  

Tags:    

Similar News