மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியில் வாக்களிக்க வந்த ஒரு முஸ்லிம் பெண் ஹிஜாப் அணிந்து வந்துள்ள நிலையில் உடனடியாக ஹிஜாப்பை அகற்றிவிட்டு வருமாறு பாஜக முகவர் கூறினார். இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அலுவலரிடம் கூறி பாஜக பிரமுகரை வெளியேற்றிய சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் இன்று காலை முதல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் பல முனை போட்டிகள் இருப்பதாக ஆளும் கட்சி வெற்றி பெறுவது கடினமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகின்ற நிலையில், 8வது வார்டில் அமீன் பள்ளி வாக்கு சாவடியில் முஸ்லிம் பெண் வாக்காளர்கள் ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். இதில் வாக்குச்சாவடிக்கு உட்பட்டவர்கள்தான் வாக்களிக்கிறார்களா அல்லது வேறு யாராவது வந்து கள்ள ஓட்டு போடுகின்றனரா என்ற சந்தேகம் பாஜக முகவருக்கு வந்துள்ளது.
இதனால் பாஜக முகவர் கிரிராஜன் என்பவர் உள்ளே வருபவர்கள் ஹிஜாப்பை அகற்றிவிட்டு வருமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பூத் ஏஜென்டுகள் மறுத்துள்ளனர். ஆனால் பாஜக பிரமுகர் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை வைத்தார். ஹிஜாப் அணிந்திருந்தால் வாக்காளரின் முகம் அடையாளம் காணமுடியாது. இதில் கள்ள ஓட்டு போடுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது எனக் கூறியுள்ளார். ஆனால் இதனை கேட்காத தேர்தல் அலுவலர் பாஜக முகவரை வெளியேற்றி உத்தரவிட்டார். இந்த சம்பவம் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: One India Tamil