பிரதமரின் அண்ணன் மகளுக்கு பா.ஜ.க கவுன்சிலர் சீட்டு மறுப்பு - வைரலான செய்தி, குவியும் பாராட்டுகள்.!
பிரதமரின் அண்ணன் மகளுக்கு பா.ஜ.க கவுன்சிலர் சீட்டு மறுப்பு - வைரலான செய்தி, குவியும் பாராட்டுகள்.!
அகமதாபாத் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க வேட்பாளராகக் கோரிய பிரதமர் நரேந்திர மோடியின் அண்ணன் மகள் சோனல் மோடிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு விட்டது. வேட்பாளர்களுக்கான புதிய விதிகளின் படி பா.ஜ.க வேட்பாளராகும் வாய்ப்பை சோனல் மோடி இழந்தார்.
அகமதாபாத் மாநகராட்சிக்கு (AMC) வரவிருக்கும் தேர்தலுக்கான வேட்பாளர்களை பா.ஜ.க அறிவித்தது. ஆனால் சோனல் மோடியின் பெயர் பட்டியலில் இல்லை. செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய சோனல் மோடி, AMC-யின் போடக்தேவ் வார்டில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிட கோரியதாக தெரிவித்திருந்தார்.
35-40 வயதில் இருக்கும் சோனல் மோடி, பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹ்லாத் மோடியின் மகள். இவர் நியாய விலைக் கடை வைத்திருக்கிறார். குஜராத் நியாய விலை கடைகள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்ட பா.ஜ.க பட்டியலில் போடக்தேவ் அல்லது AMCயின் வேறு எந்த வார்டிலும் இருந்து வேட்பாளராகவும் சோனல் மோடியின் பெயர் இல்லை. விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியானவை என்று மாநில பா.ஜ.க தலைவர் சி.ஆர் பாடில் கூறினார்.
கட்சித் தலைவர்களின் உறவினர்களுக்கு வரவிருக்கும் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காது என்று சமீபத்தில் குஜராத் பா.ஜ.க அறிவித்தது. எவ்வாறாயினும், சோனல் மோடி, பிரதமரின் அண்ணன் மகளாக அல்லாமல் பா.ஜ.க தொண்டராக தேர்தல் டிக்கெட்டை கோரியதாகக் கூறினார்.
"நான் பா.ஜ.க தொண்டராக டிக்கெட் கோரினேன். பிரதமரின் உறவினராக அல்ல. எனக்கு டிக்கெட் வழங்கப்படாவிட்டாலும், அர்ப்பணிப்புள்ள தொண்டராக கட்சியில் சுறுசுறுப்பாக இருப்பேன்" என்று சோனல் மோடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.