2024 தேர்தல்: தென்னிந்தியாவில் 129 தொகுதிகளுக்கு பா.ஜ.க டார்கெட் - அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
வருகின்ற 2024 லோக்சபா தேர்தலில் தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்களில் மொத்தம் 129 லோக்சபா தொகுதிகளுக்கு குறிவைத்து பா.ஜ.க. இப்போதே தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டது. அதன்படி தென்னிந்தியாவில் அதிகளவிலான தொகுதிகளை பெற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்சை நிறைவேற்றி வருகிறார் என பா.ஜ.க. வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.
பா.ஜ.க. ஆரம்பிக்கப்பட்ட காலக்கட்டத்தில் இருந்தே வடமாநிலங்களில் அதிகமான இடங்களை பிடித்த அக்கட்சியால் தென்னிந்தியாவில் குறைந்த அளவிலான தொகுதிகளை மட்டுமே பிடித்து வந்தது. அதன்படி கர்நாடகா மாநிலத்தில் அதிகளவிலான தொகுதிளை பா.ஜ.க. கைப்பற்றியது. ஆனால் தமிழகம், கேரளா, ஆந்திராவில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
இந்நிலையில், தற்போதைய நிலையை மாற்றவிட வேண்டும் என்பதில் ஒவ்வொரு முறையும் பா.ஜ.க. மேலிடம் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போதைய லோக்சபா தேர்தலில் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில், வருகின்ற 2024ம் ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. தென்னிந்தியாவில் உள்ள தொகுதிகளுக்கு குறிவைத்துள்ளது. இதற்கான ஸ்கெட்ச்சை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்டுக் கொடுக்க அதனை கட்சிதமாக நிறைவேற்ற பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தயாராக உள்ளார். தற்போதைய சூழலில் தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி மட்டுமே ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருந்து வருகுறது.
அம்மாநிலத்தில் டி.ஆர்.எஸ். கட்சிக்கு போட்டியே இல்லை என்ற நிலை உள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பா.ஜ.க. மும்முரமாக களப்பணியாற்றி வருகிறது. ஆனால் ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிரான தெலுங்கு தேசம் கட்சி உள்ளது. இதனால் அங்கு பா.ஜ.க.வுக்கு சற்று சறுக்கல் ஏற்படலாம் என தெரிகிறது. இருந்த போதிலும் அந்த இரண்டு மாநிலங்களிலும் கணிசமான தொகுதிகளை இம்முறை அறுவடை செய்வதற்கு பா.ஜ.க. தீவிர களப்பணியாற்றி வருகிறது.