"எங்களை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது?" - தி.மு.க'வுக்கு எதிராக கொந்தளித்த ஜாக்டோ ஜியோ !
Breaking News.
ஆசிரியர்கள் மீது அப்படி என்ன நிதியமைச்சருக்கு வன்மம் என ஆசிரியர் சமுதாயம் நிதியமைச்சர் பி.டி.ஆருக்கு எதிராக கொதித்து எழுந்துள்ளது.
இதுகுறித்து ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய அரசு அறிவித்த 11 விழுக்காடு அகவிலைப் படியினை நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் அரசின் தொற்று நிவாரணப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி, தமிழக மக்களை கரோனா கோரப் பிடியில் இருந்து காக்கும் பணியில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இறந்த நிலையிலும், தங்களின் உயிரினைத் துச்சமென மதித்து, களப்பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு 1-4-2022 முதல் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தையும் பேரதிர்ச்சியினையும் ஏற்படுத்தி உள்ளது.
நிதியமைச்சர் நேற்றைய தினம் (23-08-2021) தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் மிகவும் துச்சமென மதித்ததோடு மட்டுமல்லாமல், பொதுமக்களிடம் அந்நியப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். மேலும், நிதிநிலை அறிக்கையில், ஒரு ரூபாயில் 19 பைசா ஊதியத்திற்காகவும், 8 பைசா ஓய்வூதியத்திற்காவும் செலவிடப்படுகிறது என்ற புள்ளிவிவரத்தை அளித்துவிட்டு,தொலைக்காட்சிப் பேட்டியில் ஒரு ரூபாயில் 65 பைசா ஊதியம்- ஓய்வூதியத்திற்காகச் செலவிடப்படுகிறது என்று முன்னுக்குப் பின் முரணாகத் தெரிவித்து பொதுமக்களிடத்தில் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களின்பால் பகைமை உணர்வை வளர்க்கும் தவறான புள்ளிவிவரத்தினைப் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2002ஆம் ஆண்டு, தமிழகத்தின் வருவாயில் 94 விழுக்காடு ஊதியம்- ஓய்வூதியத்திற்காகச் செலவிடப்படுகிறது என்ற கருத்தைத் தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாமல், ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களின் பல்வேறு சலுகைகளை ரத்து செய்து, ஓய்வூதியப் பணப்பலன்களை ரொக்கமாக வழங்காமல் பணப் பத்திரமாகத் தந்தார். அன்றைய தினம், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி 94 விழுக்காடு ஊதியம்-ஓய்வூதியத்திற்காகச் செலவிடப்படுகிறது என்பதனைப் புள்ளிவிவரத்தோடு மறுத்தது மட்டுமல்லாது, ஆளுகின்ற அரசு தனது கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களுக்கும் வழங்கும் ஊதியம்- ஓய்வூதியத்தினை சுமையாகக் கருதக்கூடாது, அரசின் திட்டச் செலவினமாகவேக் கருத வேண்டும் என்று தெரிவித்தார்.