இது சமூகநீதிக்கு பெரும் பின்னடைவு டெல்லி விரையுங்கள் - ஸ்டாலினுக்கு ராமதாஸ் கோரிக்கை !

Ramadoss urges Stalin To take action Immediately.

Update: 2021-08-23 15:00 GMT

'சமூகநீதிக்கு பெரும் பின்னடைவு' என சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இந்தியாவில் முழுமையான சமூகநீதியை உறுதி செய்வதற்கு வசதியாக 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்தியா கல்வி மற்றும் சமூக அடிப்படையில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட நாடு என்ற அடிப்படையில், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களை முன்னேற்றுவதற்காக இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு நிகர்நோக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கின்றன.

அதற்கான உரிமைதாரர்களின் அளவை தீர்மானிப்பதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தான் மிகவும் சரியான நடவடிக்கை என்ற நிலையில், அதை மேற்கொள்ள தாமதிப்பது நியாயமல்ல.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படுவதற்கு முன், வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட 1980ஆம் ஆண்டிலிருந்து கடந்த 42 ஆண்டுகளாக சாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நான் வலியுறுத்தி வருகிறேன். மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகித்த போதெல்லாம் இதை வலியுறுத்தியது. அதை ஏற்றுக் கொண்டு 2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்த அப்போதைய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி ஒப்புக்கொண்ட நிலையில், குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், சில அதிகாரிகள் செய்த சதி ஆகியவற்றால் அந்த வாய்ப்பு கை நழுவிப் போய்விட்டது. அது சமூகநீதிக்கு பெரும் பின்னடைவு ஆகும்.

சாதிவாரி மக்கள்தொகையையும் கணக்கெடுக்க வேண்டும். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவும், எதிர்க்கட்சி வரிசைகளில் உள்ள காங்கிரசும், சமாஜ்வாதி, இராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும் ஆதரிக்கின்றன. இந்த நடவடிக்கையை எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை. எனவே, 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும். பிகார் மாநில முதல்வரைப் போலவே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் அனைத்துக் கட்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிக்கையை வலியுறுத்த வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


Source - Asianet NEWS

Tags:    

Similar News