தேசத்தை காக்க வந்த கடவுளாக பிரதமர் மோடியை மக்கள் பார்க்கின்றனர் ! - மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!
பிரதமர் மோடியை இந்த தேசத்தை காக்க வந்த கடவுள் என்று பொதுமக்கள் போற்றுகின்றனர் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியை இந்த தேசத்தை காக்க வந்த கடவுள் என்று பொதுமக்கள் போற்றுகின்றனர் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2020ம் ஆண்டின் தொடக்க காலத்தில் இருந்து கொரோனா பெருந்தொற்று உலகை உலுக்கி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அனுபவித்த சோதனைகளும் துன்ப துயரங்களும் கொஞ்சமல்ல. ஆனால் மக்களின் துன்பம் கண்டு உள்ளம் துடித்த பிரதமர் நரேந்திர மோடி, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வழி நிற்பவராக இந்தியாவை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீட்கும் பணியைத் தொடங்கினார்.
இந்த வைரஸை அழிய வேண்டும் என்றால் தடுப்பூசி ஒன்றே தீர்வு என்ற நிலை உருவாகியிருந்தது. இதனால் கொரோனாவை அழிக்கும் தடுப்பூசியை தயார் செய்யும் பணியில் ஈடுபடுங்கள் என்று விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த அறிவிப்பையும் எதிர்க்கட்சிகள் கேலி செய்ததுடன் மக்களிடம் பயத்தையும், பீதியையும் ஏற்படுத்தினர். ஆனால் உறுதியுடன் பிரதமர் மோடி தடுப்பூசி தயாரிக்கும் பணியில் மும்முரம் காட்டினார். இதனால் உள்நாட்டிலேயே கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி வெற்றிகரமாக கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதன் பின்னர் பிரதமர் மோடி நேரடியாக கவனம் செலுத்தி 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி கொரோனா தடுப்பூசி இயக்கமானது நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசிக்காக ஏங்கியிருந்த காலத்தில் இந்தியாவிலும் தடுப்பூசியை தயார் படுத்தி வரலாற்றில் இடம் பிடித்தது.
தடுப்பூசி கண்டுப்பிடித்ததும் முதன் முதலில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், காவலர்கள் என்று முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனையால் எதிர்க்கட்சிகளின் தவறான பிரச்சாரம் அவநம்பிக்கையும் முடிவுக்கு வந்தது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி தற்போது 100 கோடி பேருக்கு மேல் முதல் டோஸ் வெற்றிகரமாக போடப்பட்டுள்ளது. 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் தடுப்பூசி சாத்தியமா என்று பேசியவர்கள் வியந்து போகின்ற வகையில் இந்த சாதனை அமைந்துள்ளது. வெறும் 10 மாதங்களில் இச்சாதனையை இந்தியா அரங்கேற்றியுள்ளது.