"ஸ்மார்ட் சிட்டி" திட்டத்தால்தான் வெள்ள பாதிப்பு என்றால், சென்னையில் கொளத்தூர் பகுதியில் மழைநீர் தேங்குவது ஏன்? எஸ்கேப்பாக பிளான் போடும் தி.மு.க!
தேவையில்லாமல் அரசியல் செய்வதைவிட்டுவிட்டு மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை மக்கள் கடுமையான சிக்கலை அனுபவித்து வருகின்றனர். சென்னையின் மையப்பகுதியை தாண்டி, தொடர் கனமழை காரணமாக தற்போது சென்னையின் புறநகர்ப் பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகத் தொடங்கியிருக்கின்றன.
மழை வெள்ளம் தேங்கிய பகுதிகளில் ராட்சத மோட்டார்கள் மூலம் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வெள்ள பாதிப்பு குறித்து, திமுக அமைச்சர்களிடம் கேள்வி கேட்டால், அவர்கள் முந்தைய ஆட்சியின் மீது பழி சுமத்துகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துக் கால்வாய்களும் முறையாகத் தூர்வாரப்பட்டுள்ளதாக கூறிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, இப்போது மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்குக் காரணம் அ.தி.மு.க ஆட்சிதான். நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்று 6மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதையெல்லாம் முறையாக எடுத்திருக்கிறோம் எனக்கூறுகிறார்.
தங்களது இயலாமையை வெளிப்படையாக சொல்ல முடியாமல், அடுத்தவர் மீது பழி போடுவதற்கான சாக்கு போக்கு பேச்சு தான் இதுவென அதிமுக வட்டாரத்தில் உள்ளவர்கள் விரக்தியுடன் கூறுகின்றனர்.
ஒரு தரப்பு திமுகவினர் இந்த மாதிரி குறை கூறிக்கொண்டிருக்கும் வேளையில், இன்னொரு தரப்பினர் அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டித் திட்டம் தான், சென்னை மழைநீரால் இப்படி பாதிக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் என்கின்றனர்.
இதற்கு கருத்து தெரிவித்துள்ள அதிமுகவினர், ஸ்மார்ட் சிட்டித் திட்டத்தால்தான் இவ்வளவு பாதிப்பு என்றால் ராயபுரம், கொளத்தூர் எனச் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மழைநீர் தேங்குவது ஏன்? என அதிரடியாக விளாசித்தள்ளினர்.