ஸ்டாலினை மிரட்டும் கிறிஸ்தவ மத போதகர்: பதிலளிக்குமா தி.மு.க?

ஸ்டாலினை மிரட்டும் கிறிஸ்தவ மத போதகர்: பதிலளிக்குமா தி.மு.க?

Update: 2021-02-06 19:36 GMT

அகில இந்திய ஜனநாயக பாதுகாப்புக் கழகம் என்ற கட்சியின்  தலைவர் பிஷப் காட்ப்ரே நோபுள், தங்களைக் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளா விட்டால், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கனவு முதல்வராக மட்டுமே நீடிக்க முடியும் என்று பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். கிறிஸ்தவர்களின் உண்மையான மக்கள் தொகை எண்ணிக்கை குறித்து அவர் கூறிய திடுக்கிடும் தகவல்கள் சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

சமீபத்தில் இந்துக்களைப் பற்றியும், இந்து மதத்தைப் பற்றியும் கொச்சைப்படுத்தி பேசியதற்காக உயர் நீதிமன்றத்தில் மன்னிப்புக்  கோரிய சர்ச்சைக்குரிய பிரபல கிறிஸ்தவ சுவிஷேகர் மோகன் சி. லசாராஸ் மனைவியின் தங்கை அருள்மதி ஏசுவடியாளின் கணவர் தான் இந்த பிஷப் காட்ப்ரே நோபுள். இவர் 'ஜீசஸ் சேவ்ஸ்' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி  திருநெல்வேலியின் இட்டேரி கிராமத்தில் ஒரு "தூய திரித்துவ பேராலயத்தை" நிறுவி இருக்கிறார். தேசிய மக்கள் சக்தி கட்சி என்ற கட்சியின் சார்பில் 2019 பாராளுமன்ற தேர்தல்களில் நின்று படுதோல்வி அடைந்திருக்கிறார்.

பிப்ரவரி 3ஆம் தேதி சென்னை YMCA  மைதானத்தில் தமிழ்நாட்டிற்கு ஒரு நல்ல முதல்வரை தேர்ந்தெடுக்க பொது ஜெபம் செய்ய வேண்டும் என்று ஒரு கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னதாகப் பேசிய பிஷப் காட்ப்ரே நோபுள் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறித்து பேசினார்.  இந்து மதத்தில் தலித்தாக இருந்து கிறிஸ்தவர்களாக மாறிய 99 சதவிகிதம் பேர் தங்கள் உண்மை மதத்தை (கிறிஸ்தவம்) அரசாங்கப் பதிவுகளில் பதிவு செய்யவில்லை என்றும், சலுகைகள் பறிக்கப்படும் என்பதால் அவர்கள் க்ரிப்டோக்களாகத் தொடர்வதாகவும் வெளிப்படையாகவே தெரிவித்தார்.  கிறிஸ்தவர்கள் சென்னையில் மட்டுமே பத்தாயிரம் திருச்சபைகளும், அதே எண்ணிக்கையிலான பாஸ்டர்களுன் இருப்பதாகவும் தெரிவித்தார். 

2011 சென்சஸ் பட,  இந்தியாவில் ஏழு சதவிகித கிறிஸ்தவர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது ஆனால் உண்மையில் அது 12 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்றார்.

இதனால் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு தனியாக தேர்தலில் இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மேலும் தங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தி.மு.க ஒப்புக் கொண்டால் மட்டுமே, ஸ்டாலின் தமிழக முதல்வராக முடியும் என்றும் இல்லையெனில் அவர் தொடர்ந்து கனவு முதல்வராக மட்டுமே இருக்க முடியும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். 

இது மிரட்டல் அல்ல என்றும் முஸ்லிம் கட்சிகளுடன் தி.மு.க கூட்டணி வைத்துக்கொண்டு இடம் ஒதுக்குவது போல கிறிஸ்தவர்களுக்கும்  ஒதுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் கிறிஸ்தவர்கள் தேர்தலில் தி.மு.கவிற்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும்  தெரிவித்தார். ஒரு கிறிஸ்தவ கட்சியால் மட்டுமே திருச்சபைக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உதவ முடியும் என்றும், தி.மு.க MLAக்கள் பெஞ்ச் மட்டுமே தட்ட முடியும் என்று கிண்டலாகக் கூறினார்.

இவர் ஏற்கனவே தன் சகலை மோகன் சி.லாஸரஸ் தனக்காக பிரச்சாரம் செய்ய வருவார் என்று 2018ல் பகிரங்கமாக கூறினார். ஆனால் இதை மோகன் சி.லாஸரஸ் வெளிப்படையாக மறுத்ததும் மட்டுமில்லாமல், தனக்கும் இவருக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை என்றும் கூறி விட்டார் என்பது கூடுதல் செய்தி. 

தி.மு.க இந்த மிரட்டல்களை எந்த அளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளும் எனத் தெரியவில்லை. கிறிஸ்தவ மக்கள் தொகை குறித்து அவர் கூறியது மிகையாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், இவ்வாறு  சலுகைகளுக்காக ஏமாற்று வேலைகள் நடப்பதை வெளிப்படையாக கூறியும் அதன் மீது நடவடிக்கைகள் ஏதும் இல்லை.

Similar News