"விடுதலை சிறுத்தைகள் போனால் போகட்டும்" என்ற கணக்கில் தி.மு.க - வரவேற்க தயாராகும் அ.தி.மு.க.!

"விடுதலை சிறுத்தைகள் போனால் போகட்டும்" என்ற கணக்கில் தி.மு.க - வரவேற்க தயாராகும் அ.தி.மு.க.!

Update: 2020-10-20 12:54 GMT

2021 சட்டமன்ற தேர்தல் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி மாற்றம் தொடர்பான தகவல்கள் றெக்கை கட்டி பறந்து வருகின்றன. கூட்டணியில் மாற்றம் இருப்பதை திராவிட கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகியவை ஒப்புக் கொண்டிருக்கின்றன. இது வேட்பாளர்கள் அறிவிக்கும் வரை தொடரும். அதுவரை யார் எந்த கூட்டணியில் என்ற விவரம் தினமும் பரபரப்பாக பேசப்படும். "தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு வாபஸ் முடிந்த பிறகு தான் எந்த கட்சி எந்த கூட்டணியில் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடியும்" என்று தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் அ.தி.மு.க'வின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர், "சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகி அ.தி.மு.க கூட்டணிக்கு வரும்" என்ற தகவலை வெளியிட்டுள்ளார். அது எந்த கட்சி என்ற விவாதமும் கிளம்பிய நிலையில் அது விடுதலை சிறுத்தைகள் என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து அ.தி.மு.க தேர்தல் வேலைகளை படு ஜோராக துவங்கியுள்ளது. அதிலும் கூட்டணி குறித்து தெளிவாக இருப்பதாக ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் தி.மு.க'வின் கூட்டணி கட்சி வருகை என்பதை அனுமானமாக கூறாமல் திட்டவட்டமாக ஜெயக்குமார் இந்த கருத்தை கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலமாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அ.தி.மு.க அரசின் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் முன்வைப்பதை தவிர்த்து வருகிறார். அதே சமயம் அ.தி.மு.க அரசின் சில செயல்களை அவர் வெளிப்படையாக பாராட்டவும் செய்கிறார். மேலும் கடைசியாக 2011 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் விசிக போட்டியிட்டது. ஆனால் போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் அந்த கட்சி வெற்றி வாகை சூடவில்லை. கடந்த முறை மக்கள் நலக்கூட்டணி என்று போட்டியிட்டு மண்ணை கவ்வினார் திருமா. இதனால் மறுபடியும் தி.மு.க கூட்டணியில் அவர் தஞ்சமடைந்துள்ளார், ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகள் கொடுத்ததை சுட்டிக்காட்டி வி.சி.க'விற்கு மிக மிக குறைவான தொகுதிகளையே ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். அப்படியே ஒதுக்கினாலும் உதயசூரியன் சின்னம்'தான் என்பதில் தெளிவாக தி.மு.க உள்ளதாக தெரிவதால் தி.மு.க கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனாலேயே அ.தி.மு.க அரசை விமர்சிக்கும் போக்கை கைவிட்டதாக தெரிகிறது, உதாரணமாக அண்ணா பல்கலைக்கழக உயர் சிறப்பு அந்தஸ்து தங்களுக்கு தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்ததை வெளிப்படையாக திருமாவளவன் பாராட்டினார். இந்த பாராட்டு ட்வீட்டை அதிமுகவின் அதிகாரப்பூர்வ தகவல் தொழில்நுட்ப பிரிவு மட்டும் அல்லாமல் முதலமைச்சர் எடப்பாடியின் டீமும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்தனர் இப்படி அ.தி.மு.க'வும் வி.சி.க'வும் நட்பு பாராட்டி வருவதும் கூட இந்த விஷயங்களை உறுதிபடுத்துகின்றன.

மேலும் தி.மு.க தமையிடமும் சரி, சில வாரிசுகளும் சரி விடுதலை சிறுத்தைகள் போனால் போகட்டும் என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறது, அப்படியே கூட்டணியில் இருந்தாலும் குறைந்தபட்ச கூட்டணி தர்மத்திற்காக 5 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் தற்பொழுது அவர்கள் போய்விட்டால் அது மிச்சம் தானே என்ற கணக்கை போட்டு வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலின் போது தி.மு.க வி.சி.க'விற்கு மிக மிக சொற்ப தொகுதிகளை ஒதுக்க முன்வந்த நேரத்தில் அ.தி.மு.க வழங்கிய 10 தொகுதிகளுக்காக அந்த கூட்டணியில் திருமா போட்டியிட்டார். அப்போது அவர் கூறிய ஒரு வார்த்தை "அ.தி.மு.க தங்களுக்கு தலை வாழை இலையில விருந்து வைக்கும் போது தி.மு.க போடும் எச்சில் சோறு எதற்கு?" என்று கூறியிருந்தார். அதே போன்ற ஒரு சூழல் தான் தற்போதும் இருப்பதாக கூறுகிறார்கள்

Similar News