இந்திய ராணுவத்தின் பலம் தற்போது ராகுல் காந்திக்கு தெரிகிறதா? - ஜே.பி.நட்டா.!

இந்திய ராணுவத்தின் பலம் தற்போது ராகுல் காந்திக்கு தெரிகிறதா? - ஜே.பி.நட்டா.!

Update: 2020-10-30 17:14 GMT

புல்வாமாவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40 பேர் தீவகரவாதத் தாக்குதலுக்கு பலியான சம்பவத்துக்குப் பழிவாங்கும் விதமாக இந்திய ராணுவம் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகளைத் தாக்கி அழித்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதல் நடந்தது உண்மையா என்றும் தேர்தல் ஆதாயத்துக்காக புல்வாமா தாக்குதலை மோடி அரசு வேண்டுமென்றே நடக்க விட்டிருக்கக் கூடும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது அனைவரும் அறிந்ததே. தற்போது பாகிஸ்தானியர்கள் வாயாலேயே அவரது பொய்கள் தவிடு பொடியாக்கப்பட்டு வருகின்றன.

ஒரு புறம் புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு தான் காரணம் என்று ஒரு அமைச்சரே கூறுகிறார். மறுபக்கம் விமானப் படை வீரர் அபிநந்தனைப் பிடித்து வைத்திருந்த போது எங்கே இந்தியா போருக்கு வந்து விடுமோ என்று வேர்த்து விறுவிறுத்த பாகிஸ்தான் ராணுவத் தளபதியின் கால்கள் நடுங்கியதாக எதிர்க்கட்சிக்காரர் ஒருவர் கூறியுள்ளார். இந்த இரண்டு சம்பவங்களும் இந்திய ராணுவத்தின் திறமை மீதும், மத்திய மோடி அரசின் மீதும் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் எழுப்பி வந்த சந்தேகங்களுக்கும் போட்டு வந்த பழிகளுக்கும் விடையளிக்கும் விதமாக அமைந்துள்ளன.



இது குறித்து சமூக மற்றும் பிரதான ஊடகங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், "இந்திய ராணுவத்தின் பலம் இந்போது புரிகிறதா?" என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தானில் புகுந்து அந்நாட்டு பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினார். அப்போது அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டபோது நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அபிநந்தனை விடுவிக்காவிட்டால் இந்தியா நம் மீது போர் தொடுக்கும் என்று கூறியபோது ராணுவ தளபதியின் கால்கள் நடுங்கின என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த எம்.பி அயாஸ் சாதிக் கூறியிருந்தார்.

இதுகுறித்து பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் கட்சி நம் நாட்டின் ராணுவத்தை பலவீனமாக சித்தரித்து பல்வேறு பிரச்சாரங்களை செய்து வருகிறது. நம் ராணுவ வீரர்களின் வீரம், தியாகம் மற்றும் திறமையைக் கேலியும் செய்து வருகின்றனர். ரபேல் போர் விமானம் குறித்து பல்வேறு பொய்ப் புகார்களைத் தெரிவித்தனர். ஆனால் இவை அனைத்தும் மக்களால் நிராகரிக்கப்பட்டு அவர்களை மக்கள் தேர்தலில் தண்டித்தனர்." என்றும் "நம் ராணுவம், நம்முடைய அரசு, இந்திய குடிமக்கள் என எதுவாக இருந்தாலும் அது ராகுல்காந்திக்கு பிடிக்கவில்லை" என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Similar News