தமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம்.. அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை.!
கடுமையான முயற்சிகளுக்குப் பின் 2004 ஆம் ஆண்டு செம்மொழி என்னும் அங்கீகாரத்தைப் பற்றிப் தமிழ்மொழி. பரிதிமாற்கலைஞர் போன்ற தமிழறிஞர்கள் தொடங்கிய இந்த போராட்டத்தில் இறுதி வெற்றியை ஈட்டித் தந்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். செம்மொழியான தருணத்தை அனைவருமே கொண்டாடி மகிழ்ந்தோம்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடுமையான முயற்சிகளுக்குப் பின் 2004 ஆம் ஆண்டு செம்மொழி என்னும் அங்கீகாரத்தைப் பற்றிப் தமிழ்மொழி. பரிதிமாற்கலைஞர் போன்ற தமிழறிஞர்கள் தொடங்கிய இந்த போராட்டத்தில் இறுதி வெற்றியை ஈட்டித் தந்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். செம்மொழியான தருணத்தை அனைவருமே கொண்டாடி மகிழ்ந்தோம்.
செம்மொழி அறிவிப்பு வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் என்னவெல்லாம் செய்து இருக்கிறோம் என கறாராக தொகுத்துப் பார்த்தால் பெரிதாக ஒன்றும் இல்லை. ஒரு வழக்கில் தமிழ்மொழி வளர்ச்சிக்கு என தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என உயர் நீதிமன்றமே கண்டித்தது நினைவிருக்கலாம்.
இளமையில் திராவிட தலைவர்களால் ஈர்க்கப்பட்டு இந்தி எதிர்ப்பாளன் ஆனேன். பிற்பாடு இந்தி படங்களில் நடித்தேன். அது தொழிலுக்காக. பல மொழிகளில் நடித்த பிறகுதான் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்பதை முழுதாக உணர்ந்தேன். தமிழ் வாழ்க என உரக்கச் சொல்ல வேண்டும். சொல்வதோடு நிறுத்திக் விடக்கூடாது. செயலிலும் காட்ட வேண்டும். இல்லையெனில் பழம்பெரும் மட்டும் பேசும் வாய்ச்சொல் வீரர்கள் என வரலாறு நம்மை பழித்துவிடும்.
ஆங்கிலத்தைத் தவிர பிற மொழிகள் ஆபத்தில் உள்ளன. தினம்தோறும் மொழிகள் செத்துக் கொண்டிருக்கின்றன. சாகாவரம் பெற்ற தமிழே தடுமாறிக் கொண்டிருக்கிறது. சீன மொழியை கற்றுக்கொள்ள உலகமெங்கும் 500க்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஆங்கிலத்தை கற்க பிரிட்டிஷ் கவுன்சில், ஜெர்மன் மொழியைப் பயிற்றுவிக்க கோத்தே சென்ரம், பிரெஞ்சு மொழி கற்க அலையன்ஸ் பிராஞ்ச்சே என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கும் பல அமைப்புகள் உள்ளன. உலக மொழிகளை பார்ப்பானேன். இந்தியைப் பரப்பவும் கற்றுக்கொடுக்கவும் இந்தி பிரச்சா சபா மிக தீவிரமாக இயங்கி வருகிறது. ஆனால் தமிழை முறையாகக் கற்று அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற இன்னும் ஒரு அமைப்பு இங்கே ஏற்படுத்தப்படவில்லை. உலகின் எந்த மூலையில் வசிக்கும் எந்த ஒரு நாட்டை சேர்ந்தவரும் தமிழை கற்றுக் கொள்ள நெறிப்படுத்தப்பட்ட பாடத்திட்டமும் தேர்வு முறையும் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் படிப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.