எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் மரணம்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்.!

எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் மரணம்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்.!

Update: 2021-02-04 09:59 GMT

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மெய்காப்பாளராக இருந்த கே.பி.ராமகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். மறைந்த முன்னாள் முதலமைச்சரும் மக்கள் திலகம் நடிகர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தவர் கே.பி.ராமகிருஷ்ணன். எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய காலத்தில் கே.பி.ராமகிருஷ்ணனை மெய்க்காப்பாளராக நியமித்து தன்னுடனேயே வைத்துக்கொண்டார்.

அரசியல் சுற்றுப்பயணத்தின்போது கே.பி.ராமகிருஷ்ணன் கூடவே செல்வார். இதன் பின்னர் எம்.ஜி.ஆர். மறைந்த பின்னர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறிது காலம் மெய்க்காப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வந்த கே.பி.ராமகிருஷ்ணன் கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதி, தவறுதலாக மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுயநினைவு இழந்த ராமகிருஷ்ணன் நேற்று உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடன் 40 ஆண்டுகளுக்கும் மேல் பயணித்த மெய்க்காப்பாளர் திரு.கே.பி.ராமகிருஷ்ணன் அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டு, அன்னாரது ஆன்மா சாத்தியடை வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
 

Similar News