டெல்லி அருங்காட்சியகம் பெயர் மாற்றம் - விமர்சனம் செய்த காங்கிரசுக்கு பா.ஜ.க தந்த பதிலடி
பிரதம மந்திரிகள் அருங்காட்சியகம் என்று டெல்லி நேரு அருங்காட்சியகம் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை விமர்சித்த காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.;
டெல்லியில் உள்ள நேரு அருங்காட்சியகம் பிரதம மந்திரிகள் அருங்காட்சியகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. அதற்கு பா.ஜ.க பதிலடி கொடுத்துள்ளது. தலைநகர் டெல்லியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்த தீன் மூர்த்தி பவனில் நேரு நினைவு அருங்காட்சியகமும் நூலகமும் அமைந்துள்ளன. இங்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 'பிரதம மந்திரி சங்கராலயா' எனப்படும் பிரதம மந்திரிகள் அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் சிறப்பு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த சங்கத்தின் துணைத் தலைவரான ராணுவ மந்திரி, ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நேரு அருங்காட்சியகத்தின் பெயரை பிரதம மந்திரிகள் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்று பெயர் மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இது அற்பத்தனமான செயல் என்றும் கட்டிடங்களின் பெயர்களை மாற்றுவதால் பாரம்பரிய பெருமைகளை அழித்துவிட முடியாது என்றும் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட ட்விட்டர் பதிவில் இந்த செயல் பா.ஜ.க மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் தாழ்ந்த மனோபாவத்தை சர்வாதிகார நடத்தையை காட்டுகிறது. இதன் மூலம் நவீன இந்தியாவின் சிற்பியான நேருவின் மாபெரும் பங்களிப்பை அவர்களால் குறைத்து விட முடியாது . தங்களுக்கு என சொந்தமான வரலாறு இல்லாதவர்கள் தான் மற்றவர்களின் வரலாற்றை அழிக்கிறார்கள் .என்று விளாசி உள்ளார். பெயர் மாற்றத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலரும் கருத்து கூறியுள்ளனர்.