அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு - இறுகும் விசாரணை வளையம்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி விரிவாக விசாரிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் போலீஸ் சார்பில் கூறப்பட்டது

Update: 2022-09-23 05:15 GMT

தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி கடந்த 2011- 15 ஆம் ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறிய பலரிடம் கோடி கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.அதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ,கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்தனர்.


இதில் குற்றம் சாட்டப்பட்ட சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கை  விசாரித்த சென்னை ஐகோர்ட், பாதிக்கபட்டவர்களுக்கு பணம் கிடைத்துவிட்டது சமரசமாக போகிறோம் என்று கூறுவதால் இந்த வழக்கை ரத்து செய்வதாக உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து என்ஜினீயர் தர்மராஜ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் பணம் கிடைத்துவிட்டது சமரசமாக செல்கிறோம் என்று கூறுவதை ஏற்று குற்ற வழக்குகளை ரத்து செய்ய முடியாது என்று கூறி ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்தது .


இந்த மோசடி வழக்கை தொடக்கத்தில் இருந்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்குகள் சென்னை எம்.பி.,  எம்.எல். ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் சென்னை ஹைகோர்ட் நீதிபதி ஜி.கே இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மூன்று வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி விரிவான விசாரணை நடத்தப்படும் என்று கூறினார். இதை அடுத்து நீதிபதி இந்த வழக்கின் இறுதி விசாரணையை வருகிற 29-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.





 


Similar News