பசும்பொன் முத்துராமலிங்கம் ஜெயந்தியை கொண்டாட பல்வேறு தடைகளை தி.மு.க அரசு விதித்துள்ளதால் அவரின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
பசும்பொன்னில் வரும் 28.10.2021 முதல் 30.10.2021 வரை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழச்சியில் பங்கேற்ற கொரோனோ கட்டுப்பாடுகள் என்ற பெயரில் பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலருமான காமாட்சி கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காகவும், 144-ன் கீழ் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாலும், பொதுமக்களின் நலன் கருதி 28.10.2021 முதல் 30.10.2021 வரை கமுதி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழச்சியில் ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மரியாதை செலுத்த வருவதற்கு அனுமதி இல்லை.
மேலும் பதிவு பெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள்,பிரதிநிதிகள் அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் (5 நபர்களுக்கு மிகாமல் மற்றும் 3 வாகனங்களுக்கு மிகாமல்) மாவட்ட கலெக்டர் முன் அனுமதி மற்றும் வாகன முன் அனுமதியை பெற்றும் அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றியும், உரிய சமூக இடைவெளியை கடைபிடித்தும் மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறது.
இதுதவிர அனுமதி பெற்று மரியாதை செலுத்த வருபவர்கள் தங்களது சொந்த வாகனங்களில் மட்டும் வர வேண்டும். வாடகை வாகனங்கள், திறந்த வெளி வாகனங்கள் டாடா ஏஸ் , வேன், டிராக்டர், இருசக்கர வாகனங்கள், சைக்கிள் போன்ற வாகனங்களில் வர அனுமதி இல்லை. வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது. மரியாதை செலுத்த வரும் வழித்தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிர்ப்பதுடன், ஒலிபெருக்கிகள் ஏதும் பொருத்தி செல்லவோ, சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது. அன்னதானம் செய்யக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனோ தொற்று குறைந்துள்ளது என மார்தட்டும் தி.மு.க அரசு பார்கள், மதுக்கடைகள், திரையரங்குகள் என அனைத்தும் இயங்க அனுமதித்துள்ளது. மேலும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விதித்த கெடுவின் படி அனைத்து மத கோவில்கள் திறக்க அனுமதியளித்தது. ஆனால் தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டத்தில் இருந்தும் முத்துராமலிங்கம் அவர்கள் பிறந்த மண்ணான பசும்பொன்னிற்கு அவரது குருபூஜை அன்று அஞ்சலி செலுத்த பலர் வருவார்கள். ஆனால் அனைத்தையும் திறந்த தி.மு.க அரசு தேவர் ஜெயந்தியை தடை விதித்தது அவரின் ஆதரவாளர்கள் மட்டுமின்றி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.