பாராளுமன்றம் கலைப்பு? கட்சிக்குள் அதிகரித்த அதிருப்தியால் சர்மா ஒலி திடீர்முடிவு!

பாராளுமன்றம் கலைப்பு? கட்சிக்குள் அதிகரித்த அதிருப்தியால் சர்மா ஒலி திடீர்முடிவு!

Update: 2020-12-20 17:08 GMT
 நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி இன்று நடத்திய அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரைத்ததாக அங்கிருந்து வரும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் தலைமை மற்றும் அமைச்சர்களுடன் நேற்று நடத்திய தொடர்ச்சியான சந்திப்புகளுக்குப் பின்னர் நேபாள அமைச்சரவையின் அவசர கூட்டத்தை சர்மா ஒலி நடத்தியுள்ளார்.

"இன்றைய அமைச்சரவைக் கூட்டம் பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரைக்க முடிவு செய்தது" என்று நேபாளத்தின் செய்தித்தொடர்பு அமைச்சர் பார்ஷமான் புனை மேற்கோளிட்டு அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த பரிந்துரை உடனடியாக ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரிக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 முன்னாள் பிரதமர்புஷ்பா கமல் தஹால் பிரச்சாந்தாவுடன் அதிகாரத்திற்கான மோதலுக்கு மத்தியில் ஒலியின் இந்த நடவடிக்கை வந்துள்ளது நேபாள அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது இந்திய எதிர்ப்புக் கொள்கையால், தொடர்ந்து உட்கட்சி மோதல் நீடித்து வந்த நிலையில், தற்போது ஆட்சியை தக்க வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், பதவிக்காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் சூழலில் முன்னதாகவே ஆட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க சர்மா ஒலி திட்டமிட்டு இந்த நடவடிக்கியை எடுத்துள்ளார் என நேபாள அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

Similar News