"பல மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைந்துள்ளது: தி.மு.க. ஏன் இதுவரை விலையை குறைக்கவில்லை!" - விஜயகாந்த் காட்டமான அறிக்கை!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகபட்சமாக குறைக்க வேண்டி அறிக்கை.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகபட்சமாக குறைக்க வேண்டி அறிக்கை.
பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ஏழை எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கில் இருந்து மீண்டு தற்போதுதான் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், பெட்ரோல் டீசல் மற்றும் விலைவாசி உயர்வு மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது. மேலும் மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க 24 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல் விலை அதிகபட்சமாக ரூ.13.35 வரை குறைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் பெட்ரோல் விலையை ரூ. 12.85 வரை குறைத்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு, தனது தேர்தல் வாக்குறுதியை சரியாக நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு 3 ரூபாய் மட்டுமே குறைத்தது. டீசல் மீதான வரியை குறைக்கவே இல்லை. எனவே மற்ற மாநிலங்களை விட அதிகபட்சமாக தமிழகத்தில் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்.
பெட்ரோல் டீசல் விலையை மேலும் உயர்த்தாமல், நிரந்தரமாக விலை குறைப்பை அமல்படுத்த வேண்டும். இதன்மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும். எனவே தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் மீதான வரியை தமிழக அரசு உடனடியாக குறைக்க வேண்டும் என தே.மு.தி.க சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Source: Facebook
Image Courtesy:Ndtv