காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கியதால், வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்தும் தி.மு.க வார்டு செயலாளர்!
கோயம்புத்தூர், சுண்டக்காமுத்தூர் வார்டை, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதால் அப்பகுதி தி.மு.க வார்டு செயலாளர் மணி மற்றும் அவரது ஆதரவாளர்கள், கழகத்தின் முடிவை எதிர்த்து போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் தேர்தல் வியூகங்களை அமைத்து களத்தில் இறங்கி விட்டனர்.
ஆனால் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மட்டுமே சலசலப்பு நீடித்து வருகிறது. பல முக்கிய இடங்களை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கி விட்டதாக தி.மு.க கட்சி பிரமுகர்கள் கட்சியின் தலைமையை ஒரு பக்கம் சாட, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் போன்ற கூட்டணிக் கட்சிகளோ "எங்களுக்கு கேட்ட இடங்கள் கிடைக்கவில்லை" என்று பல இடங்களில் தனித்து போட்டி காண்கின்றனர். தி.மு.க கூட்டணிக்குள்ளையே பல சம்பவங்கள் நடந்தேறி வரும் நிலையில், கோயம்புத்தூர் சுண்டக்காமுத்தூர் 89வது வார்டு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதை எதிர்த்து அப்பகுதி தி.மு.க வார்டு செயலாளர் மணி தனது ஆதரவாளர்களுடன் வீதிக்கு இறங்கி கழகத்தின் முடிவை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.
இச்சம்பவம் கோவை தி.மு.க'வை அதிர வைத்துள்ளது.