அதிகாரிகள் சிபாரிசோடு பழனி மூலவரை செல்போனில் படம் பிடிக்கும் ஆர்வக்கோளாறுகள் - அறநிலையத்துறையின் லட்சணம் !
அறுபடை முருகன் கோவில்களில் முக்கிய ஸ்தலமான பழனி கோவிலில் மூலவரை அரசு அதிகாரிகளின் சிபாரிசுடன் செல்போனில் படம் பிடிப்பதால் பலர் அதிருப்தியடைந்துள்ளனர்.
அறுபடை வீடுகளில் 3'ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக புகழ்பெற்றது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்கின்றனர். மேலும் தினமும் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதுடன் முடிக்காணிக்கை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்.
பக்தர்கள் பழனி முருகன் கோவில் வெளிப்பிரகாரத்தில் தங்கள் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் தண்டபாணி நிலையம், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் "செல்பி ஸ்பாட்" அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மூலவர் சிலையை புகைப்படம் எடுப்பதை தடுக்க கோவிலின் உட்பகுதியில் செல்போன், கேமரா போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் சிலர் செல்போனை பயன்படுத்தி மூலவரை புகைப்படம் எடுத்து வருவதால் அங்கு பக்தியுடன் வரும் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அரசு அதிகாரிகள் சிபாரிசுடன் வரும் பக்தர்கள் சிலர் தங்களது செல்போன் மூலம் மூலவரை படம் பிடிப்பது தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே பழனி முருகன் கோவிலில் செல்போன் தடையை முழுவதுமாக தீவிரப்படுத்த வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.