"100 நாட்களில் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு, நிலுவை அகவிலைப் படியை வழங்குவோம்" 200 நாட்கள் கடந்தும் காற்றில் பறக்கும் தி.மு.க'வின் வாக்குறுதி !
"100 நாட்களில் நிலுவை அகவிலைப் படியை வழங்குவதாக உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின், 200 நாட்களை தாண்டியும் எங்களை கண்டுகொள்ளவில்லை" என அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள், தங்கள் மனக்குமுறல்களை கொட்டுகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தன் தேர்தல் பிரச்சாரத்தின் போது பல வாக்குறுதிகளை மக்களுக்கு வாரி வழங்கினார். அதில் அரசு ஊழியர்களின் வாக்கு வங்கியை கணக்கில் கொண்டு, முக்கிய வாக்குறுதியாக " அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு நிலுவை அகவிலைப் படி வழங்கப்படும்" என்று கூறியிருந்தார். இந்த வாக்குறுதியை ஆட்சிக்கு வந்து நூறு நாட்களில் நிறைவேற்றப்படும் என்று ஓய்வூதியர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார்.
ஆனால் தற்பொழுது தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று 200 நாட்கள் கடந்தும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு நிலுவை அகவிலைப் படி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை தற்போதுவரை நிறைவேற்றவில்லை. இதனால் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் கடும் மனவேதனையடைந்து வருகின்றனர்.
இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக பென்ஷனர் நலச்சங்க தலைவர் கதிரேசன் அவர்கள் கூறுகையில்:
அகவிலைப்படி உயர்வு 2015 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 'ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் வழங்கி விடுவோம்; கவலை வேண்டாம்' என தேர்தலுக்கு முன் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து 200 நாட்களை கடந்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. முதல்வர் தனிப்பிரிவிற்கும் ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்கள் தங்கள் மனக்குமுறலை தொடர்ந்து புகார் மனுவாக பதிவு செய்து வருகின்றனர். இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
தி.மு.க ஆட்சி என்றாலே அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு நன்மையை செய்யும் என்று தி.மு.க தொண்டர்களால் கட்டமைக்கப்பட்ட கருத்தாக்கம், இந்த ஓய்வூதியர்கள் வேதனையை அறியும் பொழுது அக் கருத்தாக்கம் நீர்த்துப்போகும் நிலை உருவாகியுள்ளது.
Image : TOI, DTNext