தி.மு.க.வும், ராமதாசும் மிரண்டு போயுள்ளனர் - போட்டு உடைக்கும் வேலூர் இப்ராஹிம்
ஊழல் பட்டியலில் தனது பெயர் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தி.மு.க. அமைச்சர்கள் உறைந்திருப்பதாக பா.ஜ.க. தேசிய சிறுபான்மையினர் அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறியுள்ளார்.
தி.மு.க.வில் உள்ள 2 அமைச்சர்களின் ஊழல் பட்டியலை இந்த வாரத்திற்கு வெளியிடுவோம் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதனை கேள்விப்பட்ட பல அமைச்சர்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். எங்கே தனது பெயர் இருக்குமோ என்ற அச்ச உணர்வுடன் காலத்தை கடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று (ஜூன் 4) திண்டுக்கல்லில் பேசிய பா.ஜ.க. சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு பேசியதாவது: தேர்தல் சமயத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு மோசடி ஆட்சி நடத்தி வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மாவட்டம் தோறும் போராட்டங்களையும், திருச்சியில் மிகப்பெரிய பேரணியையும் நடத்துவதற்கு பா.ஜ.க. சார்பில் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
மேலும் அவர் பேசும்போது, மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் 16 சதவீதம் மட்டுமே பெட்ரோலிய பொருட்களின் விலை உள்ளது. மத்திய அரசு 2 முறை பெட்ரோல் மற்றும் டீசல் காஸ் சிலிண்டரின் விலையை குறைத்து உத்தரவிட்டது. தற்போது தி.மு.க.வை மக்கள் புறக்கணிக்க தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் குற்றவாளிகள் பெருகி வருகின்றனர். கூலிப்படைகள், கொலையாளிகளை கைது செய்யாவிட்டால் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிடும் என்ற கடந்த காலங்களைப் போன்று தி.மு.க. ஆட்சி கலைக்கப்படலாம். மக்களாட்சியில் தி.மு.க.வின் மன்னராட்சி நடைபெறுகிறது.