எதிர்த்த தேர்தல் பத்திரத் திட்டத்தின் மூலமே கட்சியின் 93% நிதியை திரட்டிய தி.மு.க-வின் பாசாங்குத்தனம்!

எதிர்த்த தேர்தல் பத்திரத் திட்டத்தின் மூலமே கட்சியின் 93% நிதியை திரட்டிய தி.மு.க-வின் பாசாங்குத்தனம்!

Update: 2021-01-06 17:57 GMT
தேர்தல் பத்திரங்கள்(Electoral Bonds) மத்திய பா.ஜ.க அரசாங்கத்தால் 2017-ல் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், 'பத்திரிகையாளர்கள்' என்ற பெயரில் வலம் வரும் எதிர்க்கட்சிகளின் அனுதாபிகளும் இத்திட்டத்திற்கு எதிராக வதந்திகளையும், பொய்களையும், தவறான தகவல்களையும் விமர்சனங்களையும் தெரிவித்து வந்தனர்.

ஒரு அரசியல் கட்சிக்கு பொதுத்தளத்தில் தெரியப்படுத்தாமல்(anonymous) நன்கொடை வழங்க பயன்படும் இந்த திட்டம், கருப்பு பணத்தில் இல்லாமல் சட்ட ரீதியாக நன்கொடை வழங்குவதை ஊக்குவிக்கிறது. பொதுத் தளத்திற்கும், RTI சட்டத்தின் கீழ் இவை வராவிட்டாலும், பாரத ஸ்டேட் வங்கி (SBI) வழியாக மட்டுமே விநியோகிக்கப்படும் இத்தகைய பாத்திரங்களில் சீரியல் எண்கள் குறிப்பிடப்பட்டு அவை ஆடிட் செய்யப்படவும், கண்காணிக்கபடவும் வழிவகை செய்யப்படுகிறது.

 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு முறையிட்டு அது இன்னும் நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் எகானமிக்டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் 2019 - 2020-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தி.மு.க தனக்கு வந்த தேர்தல் நிதிகளில் கிட்டத்தட்ட 93 சதவிகிதத்தை இத்தகைய தேர்தல் பத்திரங்களில் இருந்து பெற்றுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. தாங்கள் சேகரித்த 48.3 கோடி ரூபாய் நன்கொடை நிதியில் 45.5 கோடி ரூபாயை இத்தகைய தேர்தல் பத்திரங்களின் மூலமாக மட்டுமே பெற்றுள்ளது. 

இதுவரை கிடைத்த புள்ளி விவரங்களின்படி இப்படி நன்கொடை நிதியில் பெரும் பகுதியை தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்டிய ஒரே கட்சி தி.மு.க தான். மற்ற கட்சிகள்  பெரும்பாலும் தேர்தல் அறக்கட்டளைகள் (Electoral Trust) மூலம் இத்தகைய நிதியை பெறுகின்றன. தி.மு.க-வை தவிர தமிழ்நாட்டின் மற்ற கட்சிகள் மற்றும் மற்ற பிராந்திய கட்சிகள் தேர்தல் அறக்கட்டளை நிதியை தேர்ந்தெடுத்து இருந்தன.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் தி.மு.க அனுதாபிகளும், ஆதரவாளர்களும் சமூக ஊடகங்களில் பெரும்பாலும் இத்திட்டத்தை விமர்சித்து வந்துள்ளனர். ஒரு படி மேலே போய், தி.மு.கவின் முக்கியத் தலைவரான PTR பழனிவேல் தியாகராஜன், ட்விட்டரில் தொடர்ந்து இந்த தேர்தல் பத்திர முறைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.

அவருடைய ட்வீட்டுகள் முழுக்க தேர்தல் பத்திரம் என்பது ஊழல் அமைப்பை நிறுவ பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் என்றும், இது பா.ஜ.க ஆட்சியில் தொடர்ந்து இருப்பதற்காகவே கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம் என்றும் கூறி வந்தார். இதன் பெரும் பயனாளி பா.ஜ.க என்றும் இது ஊழல் முழுக்க முழுக்க ஊழல் செய்பவர்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் கருவி என்ற ரீதியில் கடந்த நவம்பர் வரையில் கூட டீவீட்களை  தொடர்ந்து செய்து வந்தார். 

இந்நிலையில் அவர் கடுமையாக விமர்சனம் செய்து வந்த அதே தேர்தல் பத்திர முறையை நம்பிக்கைக்குரிய முறையாக தி.மு.க ஏன் தேர்ந்தெடுத்தது என்ற கேள்வி எழுகிறது. விமர்சிக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு விஷயத்தை விமர்சித்து பின்னாளில் அதே முறையை தாங்கள் பின்பற்றுவது என்ன வகையிலான நேர்மை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Similar News