அரக்கோணம் சம்பவம்: பா.ம.க. மீது பழி சுமத்திய பாவிகளுக்கு மனசாட்சி இருந்தால் மன்னிப்பு கேட்கட்டும்: டாக்டர் ராமதாஸ்.!
மாறாக, பிளவை ஏற்படுத்தி அதில் பிழைப்பு நடத்தும் சக்திகளையே ஆயுதமாக ஏந்தி, அந்த ஆயுதத்தை அப்பாவி வன்னியர்கள் மீது ஏவுவீர்கள் என்றால் நீங்கள் நடத்துவது அரசியல் அல்ல...
அரக்கோணம் இரட்டைக் கொலை தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தையடுத்த சோகனூர் பகுதியில் நடைபெற்ற மோதலில் இருவர் கொல்லப்பட்ட நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற இ.ஆ.ப. அதிகாரி ப.சிவகாமி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு அறிவித்திருக்கிறது. உண்மைகளை புதைப்பதால் மறைத்து விட முடியாது என்பதை உறுதி செய்யும் வகையில், உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
அரக்கோணம் நிகழ்வில் கொல்லப்பட்ட இருவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை; அவர்கள் பானை சின்னத்திற்கு ஓட்டு கேட்கவும் இல்லை; இந்தக் கொடிய படுகொலைகளின் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை என்றும் உண்மை கண்டறியும் குழு கூறியிருக்கிறது. இதையே தான் பாட்டாளி மக்கள் கட்சியும் தொடக்கத்திலிருந்தே கூறி வந்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த நிலைப்பாடு மிகவும் சரியானது என்பதை உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை நிரூபித்துள்ளது.
உண்மை கண்டறியும் குழுவின் தலைவர் ப.சிவகாமி பா.ம.க.வுக்கு ஆதரவானவர் அல்ல. பா.ம.க. மீது பல்வேறு தருணங்களில் தெரிந்தே அவதூறுகளை பரப்பியவர்களில் அவரும் ஒருவர். ஆனாலும், அரக்கோணம் படுகொலைகள் தொடர்பான விசாரணையில் அறத்தின் பக்கம் நின்று உண்மைகளை வெளிக்கொண்டு வந்த ப.சிவகாமியின் முயற்சி வரவேற்கத்தக்கது; இது பாராட்டப்பட வேண்டியதாகும்.
அரக்கோணம் படுகொலையில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த எவருக்கும், எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத் தான் தொடக்கம் முதலே நான் கூறி வந்தேன். ஆனால், பா.ம.க.வுக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத இப்படுகொலைகளில் பா.ம.கவை சம்பந்தப்படுத்தி சில சில்லறை கட்சிகள் அவதூறு பரப்பின. தமிழகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டும் என்பதில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு அக்கறை இருந்திருந்தால், இந்த அவதூறு பரப்புரையை கண்டித்து இருந்திருக்க வேண்டும்; வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதற்கு தேவையான ஆக்கப்பூர்வ பணிகளை செய்திருக்க வேண்டும். ஆனால், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அதை செய்யவில்லை. மாறாக, பா.ம.க. மீதான அவதூறு பரப்புரைக்கு துணை போயின.