அன்புள்ள பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு.. ராமதாஸ் எழுதிய பரபரப்பு கடிதம்!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
அன்புள்ள பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு,
வணக்கம்!
பொருள்: இந்தியாவில் முழுமையான சமூகநீதியை உறுதி செய்ய 2021 &ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த ஆணையிடக் கோருதல் & தொடர்பாக
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் புதிய சாதிகளைச் சேர்க்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று மராத்தா இட ஒதுக்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் பறிக்கப்பட்ட மாநில அரசுகளின் சமூகநீதி உரிமையை மீண்டும் நிலைநாட்டும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 127-&ஆவது திருத்தத்தை செய்யும் அரசியல் சட்டத்திருத்த முன்வடிவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியதற்காக உங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல், இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உண்மையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்தக் கடிதத்தை தங்களுக்கு நான் எழுதுகிறேன். தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கையாகும். அதற்கான தேவை அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் முதன்மையான நோக்கங்களில் ஒன்று உள்ளடக்கிய வளர்ச்சி ஆகும். இந்தியா விடுதலையடைந்து 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், பல்வேறு துறைகளில் வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்திருக்கிறது. ஆனால், அந்த வளர்ச்சியின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்திருக்கின்றனவா? என்றால் இல்லை என்பது தான் உண்மை ஆகும். அதனால் தான் இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன. அதற்கான காரணங்களில் ஒன்று வளர்ச்சியால் கிடைக்கும் பயன்களை அனுபவிக்கும் அளவுக்கு சமூகத்தில் பின்தங்கிய மக்களால் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகளை பெற முடியவில்லை. இந்த நிலையைப் போக்கி அனைவருக்கும் கல்வியும், வேலைவாய்ப்பும் கிடைக்கச் செய்வதற்கான கருவி தான் இட ஒதுக்கீடு எனும் சமூகநீதி நடவடிக்கையாகும். இந்தியாவில் தேசிய அளவிலும், மாநிலங்களிலும் சமூக அளவிலான மக்கள்தொகை அடிப்படையில் குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
ஆனால், தேசிய அளவிலும், மாநில அளவிலும் இட ஒதுக்கீட்டிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும், பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இட ஒதுக்கீட்டின் நியாயத்தை உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நிருபிக்க சாதிவாரி மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் தேவை. ஆனால், நம்மிடம் அது இல்லை. இந்தியா விடுதலை அடைந்த பிறகு இதுவரை வழங்கப்பட்ட எந்தவொரு எந்தவொரு இட ஒதுக்கீடும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப் படவில்லை. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை எதிர்கொள்ள சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். இதை பல்வேறு தருணங்களில் உச்சநீதிமன்றமும், பல்வேறு மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களும் வலியுறுத்தியுள்ளன.