கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கதிர் ஆனந்த் ஆதரவாளர்கள் - ஓரம் கட்டப்படுகிறாரா அமைச்சர் துரைமுருகன் மகன் !

Update: 2021-10-24 09:30 GMT

தி.மு.க எம்.பி'யும், அமைச்சர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்த்'ன் ஆதரவாளர்களை தி.மு.க'வில் இருந்து நீக்கியிருப்பது தி.மு.க வட்டத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்கு ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் நந்தகுமாரின் உறவினர் சத்யானந்தம் ஓர் அணியாகவும், அனங்காநல்லூரைச் சேர்ந்த தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் ரஞ்சித்குமார் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர். நடைபெற்று முடிந்த மறைமுகத் தேர்தலில், மாவட்டச் செயலாளரின் உறவினர் சத்யானந்தத்துக்கு எதிராக 15 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். ஆனாலும், அ.தி.மு.க சுயேச்சை கவுன்சிலர்களின் ஆதரவுடன் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஒன்றியத் தலைவர் பதவியைப் பிடித்தார் தி.மு.க'வின் சத்யானந்தம். இந்நிலையில், எதிர்த்து வாக்களிக்கக் காரணமாக இருந்த தி.மு.க'வின் மற்றோர் அணியின் நிர்வாகிகள் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக முரசொலியில் குறிப்பிட்டுள்ளதாவது, "ஒன்றிய கவுன்சிலரான எதிரணி வேட்பாளர் ரஞ்சித்குமார், அவரின் தந்தை சக்கரவர்த்தி, குடியாத்தம் மேற்கு ஒன்றியச் செயலாளர் (பொறுப்பு) கள்ளூர் ரவி, குடியாத்தம் தெற்கு ஒன்றியச் செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான கிருஷ்ணமூர்த்தி, குடியாத்தம் கிழக்கு ஒன்றியத் துணைச் செயலாளர் மனோஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படிடை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுவதாக அறிவிப்பு" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீக்கப்பட்டவர்கள் எம்.பி கதிர் ஆனந்த்'தின் ஆதரவாளர்கள் என்பதால் கதிர் ஆனந்த் அவர்களை ஓரம்கட்டும் செயலாகவும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


Source - Asianet NEWS

Tags:    

Similar News