தி.மு.க. அரசே வெள்ள நிவாரணத்தை உடனடியாக வழங்கிடு: எடப்பாடி பழனிசாமி காட்டமான அறிக்கை!
நெற்பயிர் ஹெக்டேர் ஒன்றுக்கு 40,000 ரூபாய் நிவாரணமாக உயர்த்தி வழங்க வேண்டும். மறு சாகுபடி செலவிற்காக, ஹெக்டேர் ஒன்றுக்கு 12,000 ரூபாய் நிவாரணமாக உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதில் லட்சக்கணக்கானோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போன்றவர்களுக்கு உடனடியாக வெள்ள நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி திமுக அரசுக்கு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களாக, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதிமுக சார்பில் சென்னை மாநகர், புறநகர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை நீர் சூழ்ந்து மூழ்கிய இடங்களை நேரில் பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக சட்டமன்ற உறுப்பினர்களும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
மிக கனமழையினால், மாநிலத்தின் அனைத்து நீர்நிலைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைகளில் இருந்தும், ஏரிகளில் இருந்தும் உபரிநீர் அப்படியே ஆறுகளில் திறந்து விடப்படுவதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், வேளாண் நிலங்கள், குடியிருப்பு பகுதிகள், சாலைகள் நீரில் மூழ்கி உள்ளதோடு, தரைப் பாலங்கள், சிறு சிறு தடுப்பணைகள் அடித்துச் செல்லப்ப்டுள்ளன.
மேலும், நான் பொதுக்களையும், விவசாயிகளையும் நேரடியாக சந்தித்தபோது, அவர்கள் தெரிவித்த முக்கியமான கருத்துக்கள்: தமிழ்நாடு முழுவதும் லட்சணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன. மேலும், வாழை, மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட பிற பயிர் வகைகளும் பெருமளவு பாதிப்படைந்துள்ளன. இதற்கான நிவாரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
யூரியா, டிஏபி உரங்கள் வரலாறு காணாத உச்ச விலைக்கு விற்கப்படுகின்றன. விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு, டீசல் விலை உயர்வின் காரணமாக வேளாண் செலவுகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பயிர் உற்பத்திக்கான செலவுகள் உயர்ந்துள்ளதால் அரசு நிவாரணமாக அறிவித்துள்ள, முழுமையாக சேதமடைந்த நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 20,000 ரூபாய் என்பதை உயர்த்தி, ஹெக்டேருக்கு 40,000 ரூபாயாகவும், நெற்பயிர் மறு சாகுபடி செலவு ஹெக்டேர் ஒன்றுக்கு 6,038 ரூபாய் என்பதை 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.