மின்சார சட்டதிருத்த மசோதா-நாடாளமன்றத்தில் நடந்தது என்ன?

கடும் எதிர்ப்புக்கிடையே மின்சார சட்ட திருத்த மசோதா நாடாளமன்றத்தில் தாக்கல்

Update: 2022-08-09 06:15 GMT

நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புக்கிடையே மின்சார சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி காரணமாக நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய மின்துறை மந்திரி ஆர்.கே.சிங் தாக்கல் செய்தார்.இந்த மசோதா,அரசின் மின்வினியோக கட்டமைப்புகளை தனியார் நிறுவனங்கள் பாரபட்சமின்றி மின் வினியோகம் செய்ய அனுமதிக்கிறது.

இதனால் செல்போன் சேவை நிறுவனங்களை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மக்கள் தேர்ந்தெடுப்பது போல் மின் வினியோக நிறுவனங்களையும் தேர்ந்தெடுக்கலாம்.

ஆண்டுதோறும் மின் கட்டணங்களை மாற்றி அமைக்கவும், அதிகபட்ச மின் கட்டணம் மற்றும் குறைந்தபட்ச மின் கட்டணத்தை நிர்ணயிக்கவும் வழிவகுக்கிறது.

மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களின் செயல்பாடுகளை வலுப்படுத்தவும் வழிவகுக்கிறது. தண்டனை முறைகளில் மாறுதல்களை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தமசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காங்கிரஸ் உறுப்பினர் மணீஷ் திவாரி பேசுகையில் "ஒரே பகுதியில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மின் விநியோகம் செய்ய இம்மசோதா அனுமதிக்கிறது. இதில் லாபம், தனியார்-மயம் இழப்பு தேசியமயம் என்றாகிவிடும். மேலும் மின் விநியோகத்தில் மத்திய அரசின் பங்கை இது குறைக்கிறது என்றார்.

தி.மு.க குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசுகையில் "தமிழ்நாடு அரசு பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. இந்த திருத்தங்கள் இலவச மின்சாரம் பெறும் ஏழை விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்" என்றார்

புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர் பிரேமச்சந்திரன் பேசுகையில் மின்சாரம் பொதுப்பட்டியலில் இருப்பதால் இதை தாக்கல் செய்வதற்கு முன்பு மாநில அரசுகளுடன் ஆலோசிப்பது மத்திய அரசின் கடமை கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்றார். மின்சார சட்டத் திருத்த மசோதாவை வாபஸ் பெறுவதாக விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மீறி மசோதா கொண்டு வரப்படுவததாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி ஆகியோர் குற்றம்சாட்டினர்.

அதற்கு மத்திய மின் துறை மந்திரி ஆர்கே சிங் கூறியதாவது எதிர்க்கட்சிகள் இந்த மசோதா குறித்து பிரச்சாரம் செய்கின்றனர் இது மக்களுக்கு ஆதரவான விவசாயிகளுக்கு ஆதரவான மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறோம்.

விவசாயிகள் தொடர்ந்து இலவச மின்சாரம் பெறுவார்கள். மானியத்தை வாபஸ் பெறும் திட்டமில்லை.இவ்வாறு அவர் கூறினார். எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.


பின்னர் மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக மின்துறை மந்திரி ஆர்.கே.சிங் அறிவித்தார். அங்கு உறுப்பினர்களின் கவலைகள் பரிசீலிக்கப்படும் என்று கூறினார.




 




Similar News