அன்னைக்கு அயோக்கியத்தனம்'ன்னு ஆ.ராசா சொன்னது தி.மு.க'வையும் சேர்த்துதானே? - பங்கம் செய்த எடப்பாடி
Breaking News.
"நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக தீர்மானம் கொண்டு வந்தபோது அது அயோக்கியத்தனம் என திமுகவின் ஆ.ராசா கூறினார். இப்போது திமுக கொண்டுவரும் தீர்மானத்திற்கும் அவரின் கருத்து பொருந்துமா?" என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க இடையே காரசார விவாதங்கள் நடைபெற்றதையடுத்து அ.தி.மு.க உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பேசுகையில், "தி.மு.க தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்கள். ஆட்சி அமைந்ததும் நீட் ரத்தாகும் என்றனர். ஆனால் நீட் தேர்வு ரத்து செய்யவில்லை. தெளிவான முடிவெடுத்து அறிவிக்காததால் நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பத்திலேயே மாணவர்கள் தற்போது நீட் தேர்வு எழுதியுள்ளனர். நீட் தேர்வு அச்சம் காரணமாக மேட்டூரைச் சேர்ந்த மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்டான். மாணவன் சாவுக்கு முழுக்க, முழுக்க தி.மு.க அரசு தான் காரணம்" என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், "ஜெயலலிதா மறைவிற்கு பின்பும் நீட் தேர்வை ரத்து செய்ய அ.தி.மு.க அரசு சட்டப்போராட்டத்தை தொடர்ந்து நடத்தியது. உச்சநீதிமன்றமும் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக யாராவது செயல்பட முடியுமா? நீட் தேர்வுக்கு எதிராக அ.தி.மு.க தீர்மானம் கொண்டு வந்தபோது அது அயோக்கியத்தனம் என தி.மு.க'வின் ஆ.ராசா கூறினார். இப்போது தி.மு.க கொண்டுவரும் தீர்மானத்திற்கும் அவரின் கருத்து பொருந்துமா?" என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.