முதலமைச்சர் ஸ்டாலின், மருமகன் சபரீசனுக்கு எதிரான வழக்கில் இடைக்காலத் தடை!

Update: 2022-04-19 15:26 GMT

முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மருமகன் சபரீசன் உள்ளிட்டோர் மீது முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த அவதூறு வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளுக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி வந்தனர். இந்த சம்பவங்களில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் தொடர்பிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த அதிமுக ஆட்சியின் போது பேசியிருந்தார். இவரது பேச்சை கலைஞர் தொலைக்காட்சி மற்றும் நக்கீரன், ஜூனியர் விகடன் உள்ளிட்ட இதழ்களும் கட்டுரையாக வெளியிட்டிருந்தது.

இந்த சம்பவத்துக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்தது. இதற்கிடையில் தன்னை தொடர்பு படுத்தி உண்மைக்கு புறம்பான தகவலை ஸ்டாலின் பேசி வருவதாக கூறி பொள்ளாச்சி ஜெயராமன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், தன்னை பற்றி ஸ்டாலின் பேசுவதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், கலைஞர் தொலைக்காட்சி மற்றும் நக்கீரன், ஜூனியர் விகடன் ஆசிரியர்களும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வலியுறுத்தி சபரீசன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் இவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதனிடையே மீண்டும் இந்த உத்தரவை தொடர்ந்து மேல்முறையீடு செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், சபரீசன் சார்பில் ஆஜரான் வழக்கறிஞர், இந்த வழக்கில் தனது கட்சிக்காரருக்கு சம்பந்தம் இல்லை என்பதால் இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதனை கேட்டுக்கொண்ட நீதிபதிகள் ஸ்டாலின் மற்றும் சபரீசன் உள்ளிட்டோர் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து வழக்கை ஜூன் 10ம் தேதிக்குள் தள்ளி வைத்தனர்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News