திமுகவை விட்டு ஜூட்.? 3வது அணியை உருவாக்கும் காங்கிரஸ்.!

திமுகவை விட்டு ஜூட்.? 3வது அணியை உருவாக்கும் காங்கிரஸ்.!

Update: 2020-11-30 14:26 GMT

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி மாவட்ட வாரியமாக அரசியல் கட்சிகள் தீவிரமாக வேலை செய்து வருகிறது. அதிமுக, திமுக, பாஜக என்று அனைவரும் களப்பணியில் இறங்கிவிட்டனர்.


இந்நிலையில், தொகுதி பேரம் படியாதது, ராஜிவ் கொலையாளிகள் விடுதலைக்கு எதிர்ப்பு போன்ற காரணங்களால், தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் மக்கள் நீதி மையம், அ.ம.மு.க., ஆகிய கட்சிகளுடன் இணைந்து 3வது அணி அமைப்பது குறித்து ரகசிய பேச்சு நடத்தப்படுவதாக தமிழக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.

பீகார் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி காரணமாக, அம்மாநிலத்தில் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி ஆட்சியை இழந்துள்ளது. இதே போன்ற நிலைமை தமிழ்நாட்டிற்கும் வரும் என்று திமுக கருதுகிறது.


தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 40 தொகுதிகளை கேட்பதாக தெரிகிறது. இவ்வளவு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டு, அதிமுகவிடம் தோல்வி அடைந்தால், ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகி விடுமோ என்ற அச்சம் திமுக தலைமைக்கு ரகசிய சர்வேயில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே காங்கிரசுக்கு குறைந்தபட்சம் 15 முதல் 20 தொகுதிகளை மட்டும் ஒதுக்கீடு செய்வதற்கு திமுக முடிவு செய்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ 38 முதல் 40 தொகுதிகளை வாங்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறது. மேலும், ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி, ஆளுநரிடம், தி.மு.க., கோரிக்கை கடிதம் வழங்கியது. இது, காங்கிரசார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேர் விடுதலை விவகாரத்தில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும் ஒடிசா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான செல்லக்குமார் எம்.பி., அளித்த பேட்டி, சமூக வலைதளங்களில், தற்போது வைரலாகி பரவி வருகிறது.

ராஜீவ் கொலையில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று அவர் கடுமையான வார்த்தையில் பேசியுள்ளார். இது திமுகவிற்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறலாம் அல்லது கட்டாயமாக வெளியேற்றப்படலாம் என கூறப்படுகிறது.


இதனால் காங்கிரஸ் கட்சி 3வது அணியை அமைக்கும் முயற்சியில் உள்ளது. நடிகர் கமலின் மக்கள் நீதி மையம், தினகரனின் அ.ம.மு.க., மற்றும் பல சிறிய கட்சிகளை சேர்த்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததாகவும், அதற்கான வேலைகளில் தற்போது காங்கிரஸ் இறங்கி விட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

Similar News