செவிலியரிடம் ரகளையில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகி!

Update: 2022-07-08 10:34 GMT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே இருக்கும் கானாடுகாத்தான் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் செவிலியரிடம் தி.மு.க. நிர்வாகி ஒருவர் ரகளையில் ஈடுபட்டுள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் உலகப்பன். இவர் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க., துணை செயலாளராக உள்ளார்.

இந்நிலையில், கடந்த 4ம் தேதி உலகப்பன் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கானாடுகாத்தான் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை மருத்துவர் பரிசோதனை செய்து, மருத்துவமனையில் தங்கி இரண்டு வேளையும் ஆன்டிபயாட்டிக் ஊசி செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால் மருத்துவமனையில் தங்காமல் தன்னுடைய அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி வீட்டில் இருந்த கொண்டே மருத்துவமனையில் உள்நோயாளியாக பதிவு செய்து கொண்டு காலை, மாலை என இரண்டு வேளையும் ஆன்ட்டிபயாட்டிக் ஊசி செலுத்தி வந்துள்ளார். இதற்கிடையில் காலை 8 மணிக்கு செலுத்த வேண்டிய ஊசி மருந்தை செலுத்திக்கொள்வதற்காக உலகப்பன் காலை 11 மணிக்கு மருத்துவமனைக்கு தாமதமாக வந்துள்ளார். அப்போது தொடர்ந்து செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டே இருந்துள்ளார்.

இதனை கண்டுப்பிடித்த பெண் செவிலியர் ஆதிலெட்சுமி, காலையில் 8 மணிக்கு போட வேண்டிய ஊசியை 11 மணிக்கு போட வந்துள்ளீர்களா என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஊசி போடும்போது இப்படி செல்போனில் பேசிக்கொண்டே இருந்தால் எப்படி நான் ஊசி போடுவது என செவிலியர் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க. நிர்வாகி, என்னை பார்த்து நீ கேள்வி கேட்கிறாயா? என்று செவிலியரை மிகவும் தரக்குறைவாகவும், தரம் தாழ்ந்த தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், செவிலியர் அரசியல்வாதியிடம் எதற்கு வம்பு என்று பொறுமை காத்துள்ளார். அதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். தி.மு.க. நிர்வாகி ஒருவர் அட்டூழியம் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News