சபரிமலை செல்லும் வழியான எருமேலியில் கனமழை காரணமாக நிலச்சரிவு - தத்தளிக்கும் கேரளம் !
கேரளத்தில் பெய்து வரும் கனமழையால் சபரிமலை செல்லும் வழியான எருமேலியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக கேரளாவின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. மேலும் மாநிலத்தின் பிரதான அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருவதால் அணைகளுக்கு வரும் உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் ஆறுகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணை நீருடன், மழை வெள்ளமும் சேர்ந்து கொள்ள தாழ்வான பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன.
இந்த நிலையில் நிலையில் கோட்டயம் மாவட்டம் எருமேலி பகுதியில் நேற்று கன மழை பெய்தது. இதில் அஞ்சால் வேலி பகுதியில் பலத்த நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த எருமேலி பகுதிதான் சபரிமலை பெருவழிபாதை செல்லும் பக்தர்கள் யாத்திரை துவங்கும் பகுதியாகும். தற்பொழுது இந்த பகுதியின் வட்டாரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுபோல பள்ளிபாடி, வாழையத்துபட்டி பகுதிகளிலும் அடுத்தடுத்து நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீடுகளில் இருந்தவர்கள் நிவாரண முகாம்களுக்கு சென்றுவிட்டதால் உயிர்பலி ஏற்படவில்லை.