பேருந்திலேயே நடத்துனர் அடித்துக்கொலை: தி.மு.க ஆட்சியில் சட்டம், ஒழுங்கு மோசம்: ஓ.பி.எஸ் கண்டனம்!

Update: 2022-05-15 10:12 GMT

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஓராண்டு கால தி.மு.க. ஆட்சியில் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் பட்டப்பகலில் கொலைகள் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகின்றன.

பெண்கள், வியாபாரிகள், சிறு தொழில் புரிவோர், காவல் துறையினர், பாமர மக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வரிசையில், அரசுப் பேருந்தின் நடத்துனர், பயணியர் ஒருவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற செயல்கள் அன்றாடம் நடந்து வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் இருக்கின்ற ஒரு பேருந்திலேயே இது போன்ற தாக்குதல் நடக்கிறது என்றால், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை எண்ணவே அச்சமாக இருக்கிறது. அரசுப் பேருந்து நடத்துனர் பெருமாளின் மரணத்திற்கு மது ஒரு காரணமாக இருந்தாலும், காவல் துறையினர் மீது இருந்த ஓர் அச்சம் தற்போது இல்லை. இதற்குக் காரணம் காவல் துறையினரே பல்வேறு தாக்குதல்களுக்கு உட்படுவதும், அதற்குப் பின் அரசியல் தலையீடு இருப்பதும்தான். சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் சீரழிந்து கிடக்கிறது.

சட்டம் ஒழுங்கு நன்றாக பராமரிக்கப்பட வேண்டுமென்றால், அரசியல் தலையீடு தடுத்து நிறுத்தப்பட்டு, காவல் துறையினர் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும். இது தவிர, மதுக் கூடங்களை அமைக்க ஆர்வம் காட்டுவதற்குப் பதிலாக மதுக் கடைகளை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை என்றைக்கு நடைபெறுகிறதோ அன்றைக்குத் தான் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்த நடத்துனர் பெருமாளை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு அரசின் சார்பில் பத்து லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டாலும், பணியில் ஈடுபட்டு இருக்கும் போது தாக்கி கொலை செய்யப்பட்டது மற்றும் அவரது குடும்பத்தின் ஏழ்மை நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Twiter

Image Courtesy:India Today

Tags:    

Similar News