சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம்.. நடிகர் அஜித்தை முன்னெடுக்கும் அ.தி.மு.க.!

சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம்.. நடிகர் அஜித்தை முன்னெடுக்கும் அ.தி.மு.க.!

Update: 2020-12-26 10:34 GMT

அனைத்து கட்சியிலும் ஐடி விங் (தகவல் தொழில்நுட்ப அணி) என்ற தனி அணி ஒன்றை அமைத்து அதற்காக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு தங்கள் கட்சியின் தேர்தல் பிரசாரங்களை அரசியல் கட்சிகள் முன்னெடுக்க தொடங்கியுள்ளது.

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரசாரத்தினை பல்வேறு வகையில் தொடங்கி நடத்தி வருகின்றது. தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் மற்றும் கிராம சபை கூட்டம் என்று நடத்தி வருகிறார்.

அதேபோன்று, பா.ஜ.க., விவசாயிகளை மாவட்டம்தோறும் சந்தித்து, புதிய வேளாண் சட்டத்தை எடுத்து கூறி வருகிறது. ஒரு பக்கம் தேர்தல் பிரச்சாரத்தையும் முன்னெடுத்து வருகிறது. 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சமீபத்தில் சேலத்தில் அ.தி.மு.க., சார்பில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். மேலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளையும் ஒரு பக்கம் ரகசியமாக நடத்தி வருகின்றார்.

கடந்த காலங்களை விட இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக நேரடியாக தேர்தல் பிரசாரங்களுக்கு செல்வதைவிட சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது பிரசாரத்தை அதிகளவில் முன்னெடுக்க அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளது.இதற்காக ஒவ்வொரு கட்சியிலும் ஐடி விங் (தகவல் தொழில்நுட்ப அணி) என்ற தனி அணி அமைத்து அதற்கு நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அந்த வேலைகளை கவனித்து வருகின்றனர். 

இந்நிலையில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ சமூக ஊடகங்கள் மூலமாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். என்றும் கோவில்பட்டி தொகுதி மக்களின் விசுவாசி என்ற பெயரில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் அறிமுகக் காட்சியின் பின்னணி இசையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டி தொகுதியில் செய்த மக்கள் நலத்திட்டங்கள் செய்ததை வீடியோவாக காட்சி அமைத்துள்ளனர்.

இதனை சமூக வலைதளங்களில் அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவினர் வேகமாக பரப்பி வருகின்றனர். இது போன்ற வீடியோவால் மக்கள் மனதில் எளிதில் இடம் பிடிக்க முடியும் என அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News