ஸ்ரீரங்கத்தை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்றுங்கள்.. பிரச்சாரத்தில் முதலமைச்சர் உரை.!

ஸ்ரீரங்கத்தை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்றுங்கள்.. பிரச்சாரத்தில் முதலமைச்சர் உரை.!

Update: 2020-12-31 16:38 GMT

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சி மாவட்டத்தில் 2 நாட்கள் தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை 9 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார்.

திருச்சியில் நேற்று இரவு முதல் பரவலமாக மழை பெய்து வருகிறது. மழையை பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டபடி தேர்தல் பிரசாரம் செய்தார். அதன்பிறகு ஸ்ரீரங்கம் மார்க்கெட்டில் வியாபாரி ஆதரவு திரட்டினார். அப்போது அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

இதன் பின்னர் அவர் பேசியதாவது: எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகிய தெய்வங்களை வணங்கி ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் அரங்கநாதரை தரிசனம் செய்து எனது பிரசாரத்தை மேற்கொள்கிறேன். இது அம்மா நின்ற தொகுதி. இந்த தொகுதி வரலாற்று சிறப்புமிக்கது. மண்ணில் இருந்து அவர் மறைந்தாலும், ஜெயலலிதா செய்த சாதனைகள் அவருக்கு புகழை சேர்த்திருக்கிறது.

இந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவதற்கு துணை நின்ற, வரலாற்று சிறப்புமிக்க இந்த இடத்தில் முதலமைச்சராக நின்று பேசுவதற்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். ஜெயலலிதா இந்த தொகுதிக்கு பல திட்டங்களை தந்திருக்கிறார். கொள்ளிடம் பாலம் ரூ.100 கோடியில் கட்டினார். வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைத்தார். டி.என்.பி.எல். தொழிற்சாலைக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தார்.

தற்போது இந்த அம்மாவின் அரசானது இந்த தொழிற்சாலையை மேலும் விரிவாக்கம் செய்ய ரூ.2 ஆயிரம் கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்துள்ளது. அதே போன்று ஜெயலலிதா திருச்சிக்கு மத்திய அரசின் சட்டக்கல்லூரி, தோட்டக்கலை கல்லூரி, திருவானைக் காவல் மேம்பாலம் கொண்டு வந்தார்.

ஆகவே, அதிமுக சார்பில் இங்கே போட்டியிடுகின்ற வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்திலே வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் இந்த தொகுதி 2021 சட்டமன்றத் தேர்தலில் அம்மாவுடைய கோட்டையாக திகழ வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே எனக்கூறினார்.

Similar News