சாமி சிலையை மீட்டு கொடுங்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாலை மறியலால் பரபரப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கோயில் சிலையை மீட்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் (அக்டோபர் 29) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-10-31 04:22 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கோயில் சிலையை மீட்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் (அக்டோபர் 29) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆளப்பிறந்தான் ஊராட்சிக்குட்பட்ட குடிக்காடு என்ற கிராமத்தில் விநாயகர் கோயில் உள்ளது. இதனிடையே அந்த கோயிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக கோயிலில் அண்மையில் பாலாலயம் செய்து சிலையை வேறு இடத்துக்கு மாற்றி வைத்திருந்துள்ளனர்.

இந்நிலையில், வேறு இடத்திற்கு மாற்றி வைக்கப்பட்டிருந்த அந்த சிலை திடீரென மாயமாகிவிட்டது. பின்னர் அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் தனக்கு கோயிலில் உரிய மரியாதை அளிக்கவில்லை எனக்கூறி சிலையை எடுத்துச் சென்று வீட்டில் வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சிலையை மீட்டுத்தருமாறு கோரி வட்டாட்சியர் மற்றும் போலீஸாரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டிக்கின்ற வகையில் சிலையை உடனடியாக மீட்டுத் தருமாறு கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் தென்றல் கருப்பையா தலைமையில் ஆளப்பிறந்தானில் கடந்த 29ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதில் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த சாலை மறியலில் ஈடுபட்ட 31 பேரை அறந்தாங்கி போலீசார் கைது செய்துள்ளனர். சிலையை உள்ளூரிலேயே ஒருவர் கடத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Source: Hindu Tamil

Image Courtesy:Samayam


Tags:    

Similar News