மேகதாது அணை.. பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு கட்டாயப்படுத்தக் கூடாது.. ராமதாஸ்.!
மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களின் பிரதிநிதிகளும் அமர்ந்து பேச்சு நடத்த வேண்டும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூறியிருக்கிறார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களின் பிரதிநிதிகளும் அமர்ந்து பேச்சு நடத்த வேண்டும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூறியிருக்கிறார். மேகேதாட்டு விவகாரத்தில் பேச்சு நடத்த வேண்டும் என்ற கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் கோரிக்கையை தமிழகம் நிராகரித்து விட்ட நிலையில், அவரது குரலை மத்திய அமைச்சர் எதிரொலிப்பது அதிர்ச்சியளிக்கிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்றும், இந்த விவகாரம் குறித்து இரு மாநில அரசுகளும் பேச்சு நடத்தலாம் என்றும் தமிழக முதலமைச்சருக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்கக்கூடாது என்றும், கர்நாடகத்துடன் மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து பேச்சு நடத்தக்கூடாது என்றும் நான் வலியுறுத்தி இருந்தேன். அதைத் தொடர்ந்து அண்மையில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மேகேதாட்டு அணை குறித்து கர்நாடகத்துடன் பேச்சு நடத்தப்படாது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
ஆனால், கர்நாடகத் தலைநகரம் பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஷெகாவத், '' மேகேதாட்டு சிக்கலை இரு மாநில அரசுகளும் பேச்சு நடத்தி தீர்க்க வேண்டும். கர்நாடகத்தின் நீர்ப்பாசனத் திட்டங்களை ஆய்வு செய்து அம்மாநிலத்திற்கு மத்திய அரசு நீதி வழங்கும்'' என்று கூறியிருக்கிறார். மத்திய அமைச்சருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, '' மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம். அதற்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுத் தருவதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உறுதியளித்திருக்கிறார்'' என்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். இவற்றைப் பார்க்கும் போது, மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடகத்திற்கு சாதகமாக செயல்படுகிறதோ? என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.