எம்.ஜி.ஆர்., நினைவு நாள் இன்று.. தமிழகமெங்கும் அ.தி.மு.க.,வினர் நினைவஞ்சலி.!

எம்.ஜி.ஆர்., நினைவு நாள் இன்று.. தமிழகமெங்கும் அ.தி.மு.க.,வினர் நினைவஞ்சலி.!

Update: 2020-12-24 08:58 GMT

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 33வது நினைவு நாளையொட்டி அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து தங்களது நினைவஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

வாழ்க்கை வரலாறு:

ஜனவரி 17, 1917ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., பிறந்தார். மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக்காலத்திலேயே, பல நாடக குழுக்களில் பிரபலமாக திகழ்ந்தார். அவர் காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகவும் பற்றுடையவராக இருந்ததால், அவருடைய இளம்வயதிலேயே இந்திய நேஷனல் காங்கிரஸில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார்.

100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், தமிழ் திரையுலகை 30 ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செய்தார். தேசிய விருது, பாரத ரத்னா விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக அரசியல் கட்சியுடன் கைகோர்த்தார். ஒரு தமிழ் நடிகர் என்ற மகத்தான புகழ் பெற்றிருந்தாலும், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் சமமான வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையையும் பெற்றிருந்தார். இதன் பின்னர் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனையடுத்து புதியதாக அ.தி.மு.கவை உருவாக்கி அனைத்து மக்களின் எண்ணங்களிலும் குடிபெயர்ந்தார். நாட்டின் மாநில முதலமைச்சர் நாற்காலியை ஆக்ரமித்த, முதல் இந்திய திரையுலக பிரமுகர் என்ற பெருமை எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களையே சேரும்.  ஒரு நடிகராக இருந்து அரசியலில் பதவி அடைந்த போதும், அவர் ஏழைகளின் தோழனாகவும், இல்லாதோருக்குக் கொடையாளியாகவும் விளங்கினார். தனது மனிதநேய பண்புகளால் அன்பு செலுத்தியதால் பெருமளவில் பிரபலமானார். இதன் பின்னர் 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இவர் மறைந்து இன்றுடன் 33 ஆண்டுகாலம் ஆகிறது. இன்றும் மக்கள் மனதில் நிரந்தரமாக வழ்ந்து கொண்டிருக்கிறார். இவரது நினைவு நாளில் கோடிக்கனக்காணவர்கள் அஞ்சலி செலுத்தி வருவதை பார்க்க முடிகிறது.
 

 

Similar News