கிருஷ்ணகிரி அருகே எம்.ஜி.ஆர். சிலையை பற்ற வைத்த தி.மு.க.வினர்.. ஆட்சியில் இல்லாதபோதே அட்டகாசம்.!

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட கெஜல்நாயக்கன்பட்டி பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். சிலையை திமுகவினர் பற்ற வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-03-01 13:56 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட கெஜல்நாயக்கன்பட்டி பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். சிலையை திமுகவினர் பற்ற வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள். இதனையடுத்து திமுக கட்சியினர் கந்திலி பேருந்து நிலையம் அருகே அட்டகாசம் செய்ய ஆரம்பித்தனர். அதாவது பயங்கர வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட பட்டாசுகளை கொளுத்தி எம்.ஜி.ஆர். சிலை மீது தூக்கி போட்டுள்ளனர். அப்போது சிலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

தேர்தல் நடத்தை விதி காரணமாக சிலை முழுவதும் துணியால் போர்த்தப்பட்டிருந்தது. இதனால் பட்டாசு கொளுத்தி போட்ட உடன் தீ மளமளவென பற்றி எரிந்தது.

அப்போது அருகே இருந்த பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த கந்திலி அதிமுக ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையிலான அதிமுகவினர் திருப்பத்தூர் பர்கூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அதிமுக நிர்வாகிகளிடம் சமாதானம் செய்தனர். தீப்பற்ற காரணமாக இருந்த திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து சாலை மறியலை கைவிட்டு சென்றனர்.

ஆட்சியில் இல்லாதபோதே திமுகவினர் இப்படி அராஜகம் செய்தால் ஒரு வழியாக ஆட்சிக்கு வந்து விட்டால் பொதுமக்களை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள் என்பதற்கு இந்த காட்சியே ஒரு உதாரணம் என்று பொதுமக்கள் பேசி செல்கின்றனர். வரும் தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் திமுகவினர் அராஜகத்தை ஒழிக்க வேண்டும் என்பது ஒட்டு மொத்த தமிழர்களின் கோரிக்கையும் ஆகும்.

Similar News