தேர் விபத்து மீட்பு பணியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. மூவரும் இணைந்து பணியாற்றினர் - அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்
தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்த மாணவனின் சடலத்துக்கு மாலை அணிவித்தேன். மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேரில் 8ம் வகுப்பு பள்ளி மாணவரும் ஒருவர் ஆவார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு என்ற கிராமத்தில் அப்பர் கோயில் தேர்த்திருவிழா நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்தனர். இந்த கோரச்சம்பவம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது. பிரதரமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பல்வேறு இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
இந்நிலையில், தஞ்சை களிமேடு தேர் விபத்து குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் சட்டமன்றத்தில் உருக்கமாக பேசினார். கடந்த 11 மாதமாக பள்ளி நிகழ்ச்சியின்போது மாணவர்களுக்கு மாலை சூட்டியுள்ளேன். ஆனால் முதன் முறையாக தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்த 8ம் வகுப்பு படித்த மாணவனின் சடலத்துக்கு மாலை சூட்டியுள்ளேன். இந்த சம்பவத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
களிமேடு ஊராட்சி மன்றத்தின் தலைவர் ஒரு அ.தி.மு.க.வை சேர்ந்தவர், ஒன்றியக்கவுன்சிலர் பா.ஜ.க.வை சேர்ந்தவர், அங்கு இருக்கின்ற மாவட்ட கவுன்சிலர் தி.மு.க.வைச் சேர்ந்தவர். இவர்கள் மூன்று பேரும் இணைந்து வேகமாக பணியாற்றியுள்ளனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Source, Image Courtesy: Vikatan