நகராட்சி கூட்டத்தை புறக்கணித்து விட்டு 'நெஞ்சுக்கு நீதி' படத்திற்கு சென்ற தலைவர்: அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள்!

Update: 2022-05-25 06:22 GMT

தி.மு.க. இளைஞரணி தலைவரும், அக்கட்சியின் எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் தமிழகம் முழுவதும் கடந்த மே 20ம் தேதி வெளியானது.

முதலமைச்சர் ஸ்டாலின் மகன் என்பதால் அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாநகராட்சி மேயர்கள், நகராட்சி, ஒன்றிய தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் அனைவருமே படத்தை முதல் நாளில் பார்த்து அதனை சமூக வலைதளங்களில் கருத்துக்களையும், படம் பார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

மக்களுக்காக சேவை செய்வதற்காக பதவிகளில் வெற்றி பெற்றவர்கள், ஒரு தனிநபரின் படத்தை பார்ப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக மாநகராட்சி மற்றும் நகராட்சி கூட்டங்களை புறக்கணித்துவிட்டு பலர் படம் பார்ப்பதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே கட்சிக்காரர்களுக்காக தியேட்டரில் உள்ள மொத்த டிக்கெட்டையும் வாங்கி இலவசமாக பார்க்க வற்புறுத்தி வருவதையும் பல இடங்களில் காண முடிகிறது.

இந்நிலையில், பெரம்பலூர் நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் அம்பிகா தலைமையில் நேற்று காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்தை நடத்தாமல் நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்டோர் நெஞ்சுக்கு நீதி படம் பார்க்க சென்றுவிட்டனர். இதனால் நகராட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் விரக்தியடைந்தனர். தலைவர் எங்கே சென்று விட்டார் என்ற கேள்வியை எழுப்பியபோது, படம் பார்க்க சென்ற தகவல் கிடைத்ததும், தலைவரை வார்த்தைகளால் வறுத்தெடுத்துவிட்டு சென்றதையும் காண முடிகிறது.

Source, Image Courtesy: Asianetnews

Tags:    

Similar News