திருச்செந்தூர் சஷ்டி விவகாரம்... வசமாக சிக்கிய திமுக...
இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா சூரசம்காரம் எழுச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது, தமிழகத்தில் கடந்த ஆறு தினங்களாக இருக்கக்கூடிய முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா பக்தர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் திருச்செந்தூர் ஆலய நுழைவு கட்டண விவகாரத்தில் அறநிலையத்துறை செய்த விவகாரம் தான் தற்பொழுது திமுக அரசுக்கு பின்னடைவாக அமையும் என விமர்சிக்கப்படுகிறது. திருச்செந்தூர் கோவிலில் சாதாரண நாட்களில் சிறப்பு தரிசனம் மற்றும் பொது தரிசனம் என இரு வழிகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இது திருச்செந்தூர், பழனி போன்ற முக்கிய கோவில்களில் உள்ள ஒரு நடைமுறையாகும்.
திருச்செந்தூரில் சிறப்பு தரிசன கட்டமாக ரூபாய் 100, அதிகாலை விஸ்வரூப தரிசன கட்டமாக ரூபாய் 100 வசூலிக்கப்படுகிறது எனவும் அபிஷேக கட்டணமாக சாதாரண நாட்களில் 500 ரூபாய் பெறப்படுகிறது எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விசேஷ நாட்கள் குறிப்பாக கந்த சஷ்டி போன்ற விசேஷ நாட்களில் அந்த அபிஷேக கட்டணம் 2000 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது எனவும் தகவல் கிடைத்துள்ளது.
ஆனால் தற்பொழுது கந்தசஷ்டி திருவிழாவால் இந்த கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டதாக கூறி பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. குறிப்பாக விஸ்வரூப தரிசன கட்டணமாக 2000 ரூபாய், யாகசாலையின் உள்ளே அமர்ந்து பார்க்க 3000 ரூபாய், அபிஷேக கட்டணமாக 3000 ரூபாய் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் விரைவு தரிசனம் என்ற பெயரில் புதிதாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாக கூறி புகார்கள் எழுந்தது. இது குறித்து வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வைரலாக உலா வந்தன, இதற்காக தனி கவுண்டர் பாதை அமைத்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களிடம் அந்த பாதையில் தரிசனத்துக்கு அனுமதிக்க ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது எனவும் அது தொடர்பான வீடியோ வெளியானது முதல் வலதுசாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் இதற்கான கண்டனத்தை பதிவு செய்து வந்தனர்.
இந்த நிலையில் ஆளும் திமுக அரசுக்கு இது பின்னடைவாக பார்க்கப்பட்ட சமயத்தில் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் கனிமொழி எம்பி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு மேற்கொண்டு பின்னர் இது குறித்து விளக்கம் அளித்த அவர் 'கட்டண உயர்வு 2018 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது தான் 2018 இல் வெளியிடப்பட்ட அரசாணை அடிப்படையில் தான் இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது' என குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து இந்த கட்டண உயர்வு ஏற்புடையது அல்ல எனக் கூறி இந்து முன்னணி கட்சியினர் 120 பேர் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர், இதுகுறித்து இந்து முன்னணி தரப்பில் கூறும் மாநிலத் துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் கூறும் பொழுது 'திருச்செந்தூர் கோவிலுக்கு மாதம் ரூபாய் 3 கோடி அளவுக்கு பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர், ஆனால் அதில் 10% கூட பக்தர்கள் நலனுக்காக கோவில் நிர்வாகம் செலவு செய்வதில்லை கோவில் பக்தர்களில் தேவையான எந்த அடிப்படையில் செய்து தரப்படவில்லை ஆனால் தரிசன கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளனர். பணம் இருப்பவர்கள் மட்டுமே கடவுளை தரிசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளனர். கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்' என கூறினார்.
இது குறித்து பல வலதுசாரிகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வந்தனர், இந்த நிலையில் பாஜகவின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் 'திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்கவே தரிசன கட்டணத்தை அரசு உயர்த்தி உள்ளது, இந்த அநியாய வசூலை தடுக்க அறவழியில் போராடிய இந்து முன்னணியினர் மற்றும் முருக பக்தர்களை கைது செய்த காவல்துறையை கண்டிக்கிறோம். திருச்செந்தூர் கோவிலில் முருக பக்தர்களுக்கு எதிரான போக்கை அறநிலையத்துறை தொடர்ந்து கடைபிடித்தால் பக்தர்களை திரட்டி மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டத்தை நடத்துவோம்' என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திமுக அரசு மக்கள் மத்தியில் குறிப்பாக தென் மாவட்ட மக்கள் மத்தியில் வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் இருப்பது, அரசு ஊழியர்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி, மின் கட்டணம், பத்திரப்பதிவு உயர்வு கட்டணம் போன்ற கட்டண உயர்வால் ஏற்பட்டுள்ள சங்கடங்கள் இப்படி பல பின்னடைவுகளை சந்தித்து வரும் நிலையில் இப்படி கோவில் கட்டண உயர்வையும் உடனடியாக அமல்படுத்தி அதன் காரணமாக பக்தர்களின் அதிருப்தியை சம்பாதித்து இருப்பது கண்டிப்பாக திமுகவிற்கு பின்னடைவாக இருக்கும் என பேசப்படுகிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஐந்து மாத காலத்தில் வர விருப்பதால் இந்த பின்னடைவு கண்டிப்பாக தூத்துக்குடி தொகுதியில் எதிரொலிக்கும் என தெரிகிறது. தூத்துக்குடி தொகுதியை குறிவைத்து வேலை செய்து வரும் கனிமொழிக்கு நிச்சயம் இது வாக்குப்பதிவில் எதிரொலிக்கும் எனவும் வேறு அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.