அப்ரூவர் ஆன அதிகாரி! முக்கிய சாட்சி சொல்லி அமைச்சர் துரைமுருகனை சிக்கவைத்த அந்த சம்பவம்...
மணல் விவகாரத்தில் மாட்டி விடக்கூடாது என்பதற்காக அதிகாரிகள் அமைச்சர் துரைமுருகன் தரப்பால் மிரட்டப்பட்டார்களா?
கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி துவங்கிய அமலாக்கத்துறை ரெய்டு தான் தற்பொழுது தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறி இருக்கிறது, தமிழ்நாட்டில் இருக்கும் மணல் குவாரிகள், மணல் சேமிப்புக் கிடங்குகள், குவாரி அதிபர்கள் வீடுகள் என 34 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினார்கள்.
பல்வேறு குழுக்களாகப் பிரிந்து இந்த அதிரடி சோதனையில் அமலாக்கத்துறை இயங்கியதில் பல தகவல்கள் வெளி வந்தன. அதாவது குறிப்பாக தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகபட்சமாக மணல் சுரண்டப்படுகிறது, சுரண்டப்பட்டு விற்கப்படும் மணல் அனைத்தும் அரசுக்கு கணக்கிற்கு வருவதில்லை, இதை சில மாபியாக்கள் தங்களது சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றன. இதில் அனைத்து தரப்பில் இருந்தும் மிகப்பெரிய மாஃபியா செயல்படுகிறது.
இது ஆளும் தரப்பு வரைக்கும் செல்கிறது என அப்போதே பல விமர்சனங்கள் எழுந்தன, அப்பொழுது அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 12 கோடி ரூபாய் ரொக்கம், தங்கம் கைப்பற்றப்பட்டது.
இந்த விவகாரத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா உள்ளிட்டோர் நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிரடியாக சம்மன் அனுப்பியிருந்தது. சம்மன் அனுப்பியது மட்டுமல்லாமல் அமலாக்கத்துறை எவ்வளவு மணல் முறைகேடாக சுரண்டப்பட்டு இருக்கிறது? எவ்வளவு மணல் கணக்கில் வராமல் மறைக்கப்பட்டிருக்கிறது? என்பதை கண்டறிய செயற்கைக்கோள் உதவியுடன் புகைப்படங்களை எடுக்க ஐஐடி நிபுணர் குழுவை நாடியது.
ஐஐடி நிபுணர் குழுவும், அமலாக்கத்துறையும் இறங்கி சோதனை நடத்தியதில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஐஐடி மற்றும் அமலாக்கத்துறை இணைந்து நடத்திய சோதனையில் கிட்டத்தட்ட 4000 கோடி ரூபாய் அளவிற்கு மணல் தமிழகத்தில் இருந்து சுரண்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, இது மட்டும் அல்லாமல் மறுபுறம் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.