இந்தியாவை வல்லரசாக்கும் இளைஞர் சக்தி.. இளைஞர்களுக்கு மத்திய அமைச்சர் அழைப்பு..

Update: 2023-12-02 11:26 GMT

இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் வலிமை இளைஞர்களின் கரங்களில்தான் உள்ளது என்றும் இந்தியாவை வல்லரசாக்கும் பயணத்தில் நாட்டின் இளைஞர்கள் அனைவரும் பங்கு பெற வேண்டும் என்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ எம் ஜெயின் கல்லூரியில் நேரு யுவகேந்திரா சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான இளைஞர் கலைத் திருவிழாவைத் தொடங்கிவைத்து பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.


வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இலக்கை 2047-ம் ஆண்டு எட்டுவது நமது லட்சியமாகும். இந்தப் பயணத்தில் நாட்டில் உள்ள உங்களைப் போன்று இளைஞர்களின் பங்கு முக்கியமானது என்று அமைச்சர் டாக்டர் எல் முருகன் மேலும் கூறினார். இளைஞர்களின் பங்களிப்போடு நாடு அமிர்த காலத்தில் அடியெடுத்து வைத்துள்ளது என்றும் அனைத்துத் துறைகளிலும் விரைவாக வளர்ந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட இளைய இந்தியா, புதிய சிந்தனையுடன், புதிய இந்தியாவை 2047-ல் கட்டமைக்கும் என்று அவர் கூறினார்.


தொடக்கக் கல்வி குழந்தைகளின் தாய்மொழியில் இருக்க வேண்டும் என்பதைப் புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது என்று அவர் கூறினார். மேலும், புதிய கல்விக் கொள்கையால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு நமது இளைஞர்கள் உலக அளவில் சிறந்த போட்டியாளர்களாக வளர்ந்து வருகிறார்கள் என்று அவர் தெரிவித்தார். ஏற்கனவே, அனைத்துத் துறைகளிலும் இறக்குமதியை சார்ந்திருந்த நாடு, தற்போது அனைத்துத் துறைகளிலும் ஏற்றுமதியில் சாதனைப் படைத்து வருகிறது என்றார். மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களால் இந்தியாவை தற்போது உலக நாடுகள் உற்று நோக்குகின்றன என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News