ஜனவரி 22 ஆம் தேதி என்று தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் மற்றும் அன்னதானங்கள் செய்ய தமிழக அரசு தடை விதித்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இதை கண்டித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது சமூக வலைதள பக்கத்தை பதிவிட்டதை அடுத்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தனது சமூக வலைதள பக்கத்தில்,
"நாளைய தினம் அயோத்தியில் ஸ்ரீராமர் திருவுருவச் சிலை, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் பிரதிஷ்டை செய்யப்படுவதை அடுத்து, நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. சாதி மத வேறுபாடின்றி, மக்கள் அனைவரும் இந்த புண்ணிய தினத்தை வரவேற்கின்றனர். பல ஆண்டு காலமாக நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள் அனைத்திலும் சிறப்புப் பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மத சார்பற்ற அரசு நடத்துகிறோம் என்ற பெயரில் இந்து மத விரோதச் செயல்பாடுகளையே முழு வேலையாகக் கொண்டிருக்கும் திமுக அரசு, தமிழக ஆலயங்களில் சிறப்புப் பூஜைகளுக்கும் அன்னதானத்திற்க்கும் தடை விதித்துள்ளதாகத் தெரிகிறது. ஆலய நடைமுறைகளில் தலையிட திமுக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? அதுமட்டுமின்றி, ஸ்ரீராமர் சிலை நிறுவப்படுவதை முன்னிட்டு, தமிழகத்தில் கோவில் நிர்வாகம் சார்பிலோ, பொதுமக்கள் சார்பிலோ, எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்றும், பொதுமக்கள் கண்டுகளிக்க பெரிய திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது என்றும் காவல்துறையினர் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகக் கோவில்கள் பக்தர்களுக்குச் சொந்தமானவை. ஆலய நடைமுறைகளில் தேவையில்லாமல் தலையிடவோ, வழிபடும் முறைகளில் குறுக்கிடவோ திமுக அரசுக்கு எந்த உரிமையுமில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்து மத மக்களின் அடிப்படை உரிமையான ஆலய வழிபாட்டைத் தடுப்பதை, மாற்று மத மக்களே விரும்ப மாட்டார்கள். யாரை திருப்திபடுத்த இந்த பிரிவினை முயற்சியில் ஈடுபடுகிறது திமுக அரசு?
மாதம் ஒருமுறை இந்து மத மக்களைச் சீண்டிப் பார்க்கும் அற்பச் செயல்பாடுகளை திமுக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். திமுகவின் தடையை மீறி, அயோத்தி ஸ்ரீராமர் கோவில் விழாவுக்காக, தமிழகக் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளும் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.