கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்! வாழ்வாதாரத்தை இழக்கும் பொதுமக்கள்! நிவாரணம் கொடுக்குமா திமுக! அண்ணாமலை கண்டனம்!
சென்னையில் முக்கிய அடையாளமாக விளங்கி வந்த கோயம்பேடு பேருந்து நிலையம் தற்போது இயங்கப்படாது இனி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதிலிருந்து பயணிகள் பெரும் அசோகரித்தை சந்தித்து வருகின்றனர். திமுக அரசின் இந்த திடீர் அறிவிப்பிற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தலைநகரம் சென்னைக்கு வந்திறங்கும் முக்கியமான பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யும்போது, குறைந்தபட்ச நேர்மையும், அடிப்படை அறிவும் இருப்பவர்கள் யாரும், திமுக அரசைப் போல, அவசரகதியிலான செயல்பாட்டில் ஈடுபட மாட்டார்கள்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தை மையப்படுத்தி, மெட்ரோ ரயில் நிலையம், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு இத்தனை ஆண்டுகளாகப் பல ஆயிரம் கோடி செலவு செய்துவிட்டு, பயணிகளுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதிகளும் செய்து முடிக்கப்பட்டாத கிளாம்பாக்கத்திற்கு, பேருந்து நிலையத்தை உடனே மாற்றுவோம் எனும் அடிமுட்டாள்தனமான செயல்பாட்டை என்னவென்று சொல்வது? கோயம்பேடு சுற்றியுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், சிறு கடைகள், உணவகங்கள் என ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிப்புக்குள்ளாகியிருப்பதற்கு, திமுக அரசின் நிவாரணம் என்ன?
தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட தென்சென்னை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், ஏற்கனவே பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற நிலையில், இந்த இடமாற்றத்தால் யாருக்குமே எந்தப் பலனும் இல்லை. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துக் கட்டணத்தை விட, சென்னையின் பல பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் போக்குவரத்துக்கான கட்டணம் அதிகமாக இருப்பது திமுக அரசுக்குத் தெரியுமா? தமிழகம் முழுவதும் இருந்து தினம் சென்னை வந்து செல்லும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை அவதிக்குள்ளாக்கிவிட்டு, இத்தனை அவசரகதியில் கோயம்பேடு பேருந்து நிலையத்தை இடம் மாற்றி, அந்த இடத்தில் என்ன திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறார்கள் என்று ஏன் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை?