குற்றவாளி கைது செய்யப்பட்ட பிறகும்.. பிடிபடும் போதைப் பொருட்களின் அளவு அதிகபட்சமாகிறது! அண்ணாமலை கண்டனம்!
போதை கடத்தல் விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே படகுகள் மூலம் சுமார் 110 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ ஹசிஸ் போதை பொருள் மற்றும் 876 கிலோ கஞ்சா ஆகியவை இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததை சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இத்தனை ஆண்டுகளாக, திமுக அரசு போதைப்பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததன் விளைவே, இத்தனை அதிக அளவில் போதைப் பொருள்கள் புழக்கம் தமிழகத்தில் இருப்பதற்குக் காரணம்.
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் தங்குதடையின்றி இருந்து வந்திருக்கிறது என்பதையே, திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் பிடிபட்ட பிறகு, தற்போது சோதனைகளில் பிடிபடும் போதைப்பொருள்களின் அதிகபட்ச அளவு காட்டுகிறது.
போதைப்பொருள்கள் நமது இளைஞர்களையும் எதிர்கால சந்ததியினரையும் அழிக்கும் ஆயுதம் என்பதை உணர்ந்து, இனியாவது திமுக அரசு தனது தூக்கத்திலிருந்து விழித்து, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறதா அல்லது, ஜாபர் சாதிக்கைப் போல, தங்கள் கட்சிக்காரர் என்று கண்டுகொள்ளாமல் இருக்கப்போகிறதா? என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.